மாண்டஸ் புயலால் மோசமான வானிலை நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 11-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலையில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் காற்றின் வேகம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. இந்த மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து நேற்று பகல் 12 மணிக்கு தூத்துக்குடி செல்லும் விமானம், பிற்பகல் 2.25 மணிக்கு சீரடி செல்லும் விமானம், இரவு 7.10 மணிக்கு மங்களூரு செல்லும் விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. அதேபோல் தூத்துக்குடியில் இருந்து மாலை 3.35 மணிக்கு சென்னை வர வேண்டிய விமானமும், சீரடியில் இருந்து மாலை 6.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு மங்களூரில் இருந்து வர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டன.
மேலும் சென்னையில் இருந்து மும்பை, மதுரை, தூத்துக்குடி, ஹுப்ளி, கண்ணூர், கோலாலம்பூர், சிங்கப்பூர், இலங்கை, டாக்கா ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் மாண்டஸ் புயலை சமாளிக்கும் விதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்வது குறித்து உயர் மட்ட ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் விமான பயணிகள் மற்றும் விமானங்களை பாதுகாப்பதற்காக அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டு சென்னையில் தரை இறங்க முடியாமல் விமானங்கள் திருப்பி விடப்பட்டால் பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் தரை இறக்க கூடுதல் இடவசதிகள் ஒதுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.