விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உதயசூரியன் சின்னத்துடன் பெண்கள் வாக்களிக்க வந்ததால் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் பொதுமக்களுடன் இணைந்து ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், சிவகாசியில் 26வது வார்டு பகுதி வாக்குச்சாவடிக்கு, உதயசூரியன் சின்னம் பொறிந்த புடவை அணிந்த பெண்கள் சிலர் வாக்களிக்க வந்துள்ளனர்.
இதை கவனித்த பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர், அவர்களை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 111 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னையில் 179ஆவது வார்டில் பூத் சிலிப்புடன் பணப்பட்டுவாடாவில் அதிமுகவினர் ஈடுபட்டதாக திமுகவினர் புகாரளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.