

கோவை, சிங்காநல்லூரை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பி, பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் 8,65,000 ரூபாய் முதலீடு செய்து உள்ளார். பின்னர் பணத்தை திரும்ப எடுக்க முயன்ற போது, பணம் முடக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் பணம் செலுத்தினால் பணம் கிடைக்கும் என்றும் கூறி மோசடி செய்து உள்ளனர்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கோவா மாநிலம் பனாஜியை சேர்ந்த ராமச்சந்திரன் (37) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் இது போன்ற மோசடிகளில் இருந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

