தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள புதிய வகை வைரசான ஒமிக்ரான் வைரஸ், உலகமெங்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய வகை வைரசால் 3-வது அலை இனி வரும் நாட்களில் உருவாகலாம் என்று தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஆலோசகரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் நரேஷ் புரோகித் எச்சரித்து இருக்கிறார்.
இதுபற்றி அவர்,தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ், தற்போதுள்ள உருமாறிய வைரஸ்களை விட ஸ்பைக் புரதத்தில் கூடுதல் பிறழ்வுகளை கொண்டுள்ளது என்பதால் தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
தடுப்பூசி திட்டம் முன்னேற்றம் கண்டு வருகிற நிலையில், 3-வது அலையில் இருந்து நோய் எதிர்ப்புச்சக்தியை பெற்றிருக்கிறோம் என நினைத்தவர்களுக்கும், நோய்த்தொற்று ஏற்பட்டபோது அறிகுறி இல்லாமல் இருந்தவர்களுக்கும் இந்த வைரஸ் பிரச்சனையை ஏற்படுத்தலாம். தொற்று பாதிப்பு அதிகரிக்கலாம். சில மாநிலங்களில் நிலைமை மோசமாகலாம்.
இந்த வைரஸ் டெல்டாவிடம் இருந்து அதிக ஆதிக்கம் செலுத்தும் என்பது கவலை அளிக்கிறது. டெல்டா வைரஸ் அதிகமாக பரவுகிற தன்மையை கொண்டது. புதிய வைரசை பொறுத்தமட்டில் அதன் பரவும் தன்மை, தடுப்பூசி செயல்திறன் குறித்து எந்த முடிவான ஆதாரமும் இல்லை. அதே நேரத்தில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றியும் வர வேண்டும் என அவர் கூறினார்.