• Sat. Apr 20th, 2024

உலகையே உலுக்கி வரும் போலி சான்றிதழ் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா..?

Byத.வளவன்

Jan 4, 2022

வாய் வார்த்தைக்கு மதிப்பிருந்த அந்தக்காலத்தில் ஒருவரை நல்லவர், வல்லவர் என்று சான்று கூறுவதற்கே எவரும் தயங்குவர். காகித எழுத்துக்கு மதிப்பு வந்தபின்பு கழுதையை குதிரை என்றும், காக்கையை குயில் என்றும் சான்றளித்து விற்றுவிடும் சாதுர்யம் வந்துவிட்டது.


‘படித்தவன் பாட்டை கெடுத்தான், எழுதியவன் ஏட்டை கெடுத்தான்’ என்பார்கள். படிப்புக்கும் பண்புக்கும் சம்பந்தமில்லை. ஆனாலும், அவை வெறும் அந்தஸ்தை பெறுவதற்காக மட்டுமே. பலரும் கற்றறிந்த சீமான்களாக தங்களை கூறிக்கொள்ளவேண்டிய அவசியம் வந்துவிட்டது.
இதை முதலாக வைத்துதான் பல வெளிநாட்டு போலி பல்கலைக்கழகங்கள் கைநாட்டு பேர்வழிகளுக்கும் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்து காசு பார்க்கத்தொடங்கின. ‘சட்டப்படிப்பு சான்றிதழ் வேண்டுமா பெங்களுருக்கு போ, மருத்துவப்பட்டம் வேண்டுமா, வட கிழக்கு மாநிலங்களுக்கு போ’ என்று ஒருகாலத்தில் வழியனுப்பிவைத்தார்கள்.


இப்போதோ சின்னஞ்சிறு நகரங்களிலும் வேண்டிய பட்டங்களை அச்சிட்டுக் கொடுக்க ஆட்கள் வந்துவிட்டனர். கஷ்டப்பட்டு படித்து வேலைக்கா போகப்போகிறோம்? கல்யாண அழைப்பிதழில் அச்சிடவும், வியாபார தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் தானே என்று சில செல்வந்தர் வீட்டு பிள்ளைகள் ரகசியமாக பட்டங்களை பெற்று மகிழ்ந்திருந்த காலம் உண்டு. இப்போது உயர் படிப்புக்கு நுழைவுத்தேர்வு வந்தபின்பு பள்ளியிறுதி சான்றிதழை மதிப்புமிக்கதாக்கும் அவசியம் வந்துவிட்டது.
‘அப்படியே, சாதி, வருவாய் சான்றிதழ்களையும் அச்சிட்டு கொடுத்துவிட்டால் பிள்ளைகளைக் கரை சேர்த்த புண்ணியம் கிட்டுமே?’ என்று எண்ணிய போலி சான்றிதழ் விநியோகஸ்தர்கள், கல்வி அதிகாரிகளாகவும், வருவாய் அலுவலர்களாகவும் மாறி, சகல சான்றிதழ்களையும் அடித்துக்கொடுக்க தொடங்கிவிட்டனர்.


சமீபத்தில் தமிழகம் முழுவதும் போலி கல்வி சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்து ஒரு அரசியல்வாதி சாதனை படைத்தார். இவர் வக்கீல், என்ஜினீயரிங், பாராமெடிக்கல் சான்றிதழ்களையும் தாராளமாக தயாரித்து கொடுத்துள்ளார். பார்கவுன்சிலில் வக்கீல்களாக பதிவு செய்பவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்த போதுதான் இவரை தலைவராக கொண்ட கும்பல் பிடிபட்டது. இவர் ஒரு போலி நிறுவனத்தை நடத்தி வந்தார். இங்கிருந்தபடியே இணையதளம் மூலமாக உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கும் தொடர்பு கொண்டு போலி சான்றிதழ்களை தயாரித்துள்ளார்.


கடந்த 2 ஆண்டுகளில் 1000 பேர் வரை இவர்களிடம் போலி சான்றிதழ் பெற்று பல்வேறு துறைகளில் பணியில் சேர்த்துள்ளனர். அரபு நாட்டில் வேலை செய்ய உருது மொழி சான்றிதழ்களையும் இவர் வழங்கி அசத்தியிருக்கிறார்.


நடிகர் ஒருவர் ஊட்டியில் நடத்திய கல்லூரியில் போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்ட புகாரும் சில வருடங்களுக்கு முன்னர் நடந்தது. இது போக, அறநிலையத்துறை வேலைக்கு, மாநகராட்சி பணிக்கு என பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் உண்டு. பீகாரில் அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் 4 லட்சத்து 30 ஆயிரம் பேரில் சுமார் 40 ஆயிரம் பேர் போலி சான்றிதழ் கொடுத்து முறைகேடாக பணியில் சேர்ந்ததாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது.


பாண்டிச்சேரியில் உயர் கல்விக்கான மையப்படுத்தப்பட்ட நுழைவு மையத்தில் போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவக்கல்லூரிக்கு சிலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர் வேலை பார்த்த பலர் போலி சான்றிதழ் மூலம் பணி நியமனம் பெற்றது கடந்த கால கதை.
தமிழகத்தில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜனிடம் கூட போலி பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் இருந்தனவென்றால் எங்கெல்லாம் அது ஊடுருவியுள்ளது என்று எண்ணி வியந்துகொள்ளுங்கள். போலி டாக்டர்கள், வக்கீல்களை உருவாக்கும் இந்த போலி சான்றிதழ்கள், இப்போது நாட்டை ஆளும் அமைச்சர்களை உருவாக்க பயன்படுத்தப்படுவது தான் வியப்பின் உச்சம். அருவருப்பின் எச்சம்.


‘தலைவர் பெரிய படிப்பெல்லாம் படித்தவர். பார்லிமெண்ட்ல விவரமா பேசுவார். நமது பிரச்சினையை தீர்த்துவைப்பார்’ என்று நம்ப வைக்க முன்பு பட்டங்கள் பயன்பட்டன. இப்போதோ, அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட துறை சார்ந்த பட்டங்கள் தேவையென்பதால் போலி சான்றிதழ்களை கொடுத்தாவது நல்ல ‘போர்ட் ஃபோலியோ’வை பெற்றுவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.


நரேந்திர மோடி தலைமையிலான முந்தைய மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஒருவர் 2004ல் போட்டியிட்டபோது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 1996ல், டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி கல்வியில் பி.ஏ., பட்டம் பெற்றதாக குறிப்பிட்டார். தற்போது முடிந்த தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பி.காம் படித்ததாக குறிப்பிட்டார். இந்த முரண்பாடு முற்றி வீதிக்கு வந்து இப்போது நீதிமன்றத்துக்கும் போய்விட்டது.


மனித வள மேம்பாட்டு துறை என்னும் அறிவு சார்ந்த துறைக்கு அமைச்சராவதற்காக அவர் தெரிவித்த இந்த தவறான கல்வித்தகுதி அடிப்படை தகுதியாகிவிட்டது. பள்ளி நிழலிலேயே ஒதுங்காத நமது நட்சத்திரங்களெல்லாம் ’நான் லண்டனில் படிச்சேன்’ என்று உதார் விடுவது வழக்கம். ஆனால், மக்களை ஆளும் ஒரு பொறுப்பு வகிக்க தவறான தகவல் கொடுக்கும் அவரது நம்பகத்தன்மையை எப்படி ஏற்கமுடியும்?


மத்திய அமைச்சரவையில் இவர் மட்டுமல்ல முன்னாள் கல்வித்துறை இணையமைச்சராக பதவியேற்ற ராம் சங்கர் கத்தாரியாவும் போலி சான்றிதழ் அளித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


பட்டப்படிப்பு 2ஆம் ஆண்டு படித்தபோது இந்தி இலக்கியத்தில் 43 மார்க்குகளும், ஆங்கிலத்தில் 42 மார்க்குகளும் வாங்கிய கத்தாரியா, இந்தி இலக்கியத்தில் 53 மார்க்குகள் வாங்கியதாகவும், ஆங்கிலத்தில் 52 மார்க்குகள் வாங்கியதாகவும் போலியாக சான்றிதழ் தயாரித்து இதற்கு முன்பு பணிபுரிந்த ஆக்ரா பல்கலைகழகத்தில் அளித்துள்ளார்.


மேலும், பட்டமேற்படிப்பு 2ஆம் ஆண்டு படிக்கும் போதும் மொழியியல் பாடத்தில் இவர் வாங்கிய 38 மதிப்பெண்ணை 72 என சித்தரித்துள்ளார். இவரால் நாடு முழுவதும் உலவும் போலி கல்விச்சான்றிதழ்களுக்கு எதிராக சட்டமியற்ற முடியுமா? இந்திய தண்டனை சட்டம் 420ன் கீழ் ஏமாற்றுதல் மற்றும் நேர்மையின்மை ஆகிய குற்றங்களுக்காக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏமாற்றுவடும், நேர்மையில்லாமல் செயல்படுவதும் மக்களை ஆளும் ஆட்சியாளர்களுக்கு தகுதியா? தலையில் இடிவிழச்செய்யும் இந்த தவறுகளோடு தலைநகர் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரும் போலி சான்றிதழ் வழங்கிய விவகாரம் தலை விரித்தாடுகிறது.


டெல்லியில் சட்ட அமைச்சராக இருந்த ஜிதேந்தர் சிங் தோமர் போலி சட்டப்படிப்பு சான்றிதழ் கொடுத்ததாக கைதானார். பீகார் பல்கலைகழகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தோமரின் பட்டப்படிப்பு சான்றிதழ் போலியானது என்றும், சான்றிதழில் உள்ள வரிசை எண் மற்றொரு நபரின் சான்றிதழுக்குரியது என்றும் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவான அகிலேஷ் திரிபாதி தனது வேட்பு மனுவில் அவாத் பல்கலை கழகத்தில் இருந்து கடந்த 2006ல் பிஏ பட்டமும் 2008ல் முதுகலை பட்டமும் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த பட்டம் போலியானது என என்று வக்கீல் விவேக் கார்க் வழக்கு தொடுத்துள்ளார்.


கல்விதான் ஆட்சிப்பொறுப்புக்கு தகுதி என்று கூறிவிடமுடியாது. அதிகம் கற்காத காமராஜர் ஆட்சி இன்றளவும் பேசப்படுவதை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். ஆனால், மற்ற தகுதி குறையும்போது கல்வித்தகுதியால் தம்மை சில தலைவர்கள் முன்னிறுத்த முயல்கின்றனர். இந்த தாழ்வு மனப்பான்மை புதுவையை சேர்ந்த ஓர் அமைச்சருக்கு இருந்தது. அதனால் ஏற்பட்ட கவலையை போக்க அவர் தேர்ந்தெடுத்த வழிமுறையோ எல்லோராலும் ஏற்கத்தகாததாய் அமைந்தது.


என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த இந்த கல்வி அமைச்சர் பத்தாம் வகுப்பைக் கூட முடிக்காத கவலை அரித்தெடுத்தது. எனவே, திண்டிவனத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வெழுத கிளம்பிவிட்டார். அதில் தான் தவறு நேர்ந்துவிட்டது. இவர் எழுதியதோ தனித்தேர்வு. ஆனால், துணைத்தேர்வராக ஒருவரை அழைத்துச்சென்று தனக்காக எழுதவைத்தது தான் அவர் செய்த ஜனநாயக தவறு. படித்தவர் என்று காட்டுவதற்காக போலி சான்றிதழ் அளித்து, பொய் கூறி, நம்பிக்கை மோசடி செய்து ஆட்சிக்கட்டிலில் அமர நினைப்போரால் இந்த நாட்டுக்கு நன்மை எதுவும் விளைந்துவிடாது. மன்னர் எவ்வழி, மக்கள் அவ்வழி என்று போலித்தனமான மக்கள் கூட்டம் உருவாகவே இது வகை செய்யும்.


கடந்த காலத்தில் காங்கிரஸ் தலைவி சோனியாவும் தனது கல்வித்தகுதி பற்றி உயர்த்தி கூறி மூக்குடைபட்டார். ‘தக்கார் தகவிலர் என்பதவரவர் எச்சத்தால் காணப்படும்’ என்பது வள்ளுவர் வாக்கு. ஒருவர் செய்து முடித்த சிறந்த செயல்களே அவரை தகுந்தவர் என்று சாட்சி சொல்லும். மாறாக, போலி சான்றிதழ் வழங்கி மக்கள் விரோத ஆட்சி நடத்துபவர்கள் வரலாற்றில் இடம்பெறுவது முயற்கொம்பு தான் என்பதை உணரவேண்டும்.


ஒருவர் தேர்தலில் நிற்க தேர்தல் அலுவலருக்கு வழங்கும் பிரமாண பத்திரம் சட்டப்பூர்வமான உறுதிமொழி. அதிலிருந்து வழுவும் அவர் எந்த தேர்தலிலும் நிற்க முடியாதபடி சட்டம் இயற்றவேண்டும். பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை போல் இதை வெறுமனே விட்டுவிட முடியாது. ஆட்சிக்கு வருபவர்களின் நாணயத்துக்கு அவரது பிரமாண பத்திரமே சான்று. நம்பிக்கை மோசடி, ஏமாற்றுக்கான வெறும் 7 ஆண்டு சிறைத் தண்டனை மட்டும் இதற்கு நல்ல தீர்வாக, தீர்ப்பாக இருக்கமுடியாது.


ஓர் அழகிக்கு அவரது உடல் வனப்பே தகுந்த சான்றிதழ் தான். ஆனால், உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் கல்வித்தகுதியையும் நடுவர்கள் பார்க்கின்றனர். அவரது கிளிப்பேச்சு நல்ல மொழிப்பேச்சாக இருக்கவேண்டும் என நினைக்கின்றனரோ என்னவோ?
சமீபத்தில் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கோலா நாட்டு அழகி லைலா லோபஸ் இங்கிலாந்தில் நடந்த தகுதிச் சுற்றில் கலந்துகொள்ள போலியான கல்விச் சான்றிதழ் அளித்ததாக புகார் எழுந்தது.


லைலா அங்கோலாவில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். ஆனால் இங்கிலாந்தில் வாழும் அங்கோலா நாட்டவருக்கான அழகிப் போட்டியில் லைலா கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார் என்று அர்ஜென்டினா நாளிதழில் குற்றஞ்சாட்டிய அதே வேளை, சார்லஸ் முகானோ என்பவர் மூலம் லைலா இங்கிலாந்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிப்பதாக போலிச் சான்றிதழ் வாங்கிக் கொடுத்ததாக வேறொரு குற்றச்சாட்டும் கிளம்பியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் இந்த போலிச்சான்றிதழ் விவகாரம் உலகையே உலுக்கி வருவது நிஜம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *