• Thu. Apr 25th, 2024

அதிக அன்பு, ஆபத்து! – மின்னல் முரளி திரை விமர்சனம்..

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதேபோல், தப்பு செய்ய காரணங்களும் இருக்கின்றன.


அவரவர் நிலைகளிலிருந்து அணுகும்போது சரி, தப்பு என்ற நிறங்கள் வேறுபடுகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர்கள் அணிந்திருக்கும் சூழ்நிலைக்கண்ணாடிகள் சரியையும், தப்பையும் வெவ்வேறு நிறங்களாக காட்சிப்படுத்துகின்றன. அப்படிப்பார்க்கும்போது, சூழ்நிலைக்கண்ணாடிகளை அணிய மறுத்து எது சரி, எது தப்பு என்ற தீர்மானத்திற்குள் நுழைவது அபத்தமானது. ஏறக்குறைய ‘மின்னல் முரளி’ யும் அதையேதான் கூறுகிறது. படத்தில் ஜெய்சனுக்கும், ஷிபுவுக்கும் இடையேயான நியாயங்களின் மோதலில் எது வென்றது? என்பதை சூப்பர் ஹீரோ பாணியில் உருவாக்கியிருக்கிறார் பசில் ஜோசப்.

கேரளாவில் குருக்கன்மூலா கிராமத்தில் டெய்லராக இருக்கும் ஜெய்சனுக்கு (டோவினோ தாமஸ்) அமெரிக்கா சென்று சம்பாதிக்க வேண்டும் என ஆசை. இதனிடையே, காதல் தோல்வி ஒன்றும் கைகோர்க்க துவண்டிருக்கும் ஜெய்சனுக்கு சூப்பர் பவர் கிடைக்கிறது. மற்றொருபுறம், டீக்கடையில் வேலைப்பார்க்கும் ஷிபு (குரு சோமசுந்தரம்)வுக்கும் சூப்பர் பவர் கிடைக்கிறது. வெவ்வேறு சூழல்களில் உழலும் இருவருக்கு கிடைக்கும் இந்த ஸ்பெஷல் பவர்களை அவர்கள் எப்படி பயன்படுத்தினார்கள்? என்பதை அவரவர் நியாயத்தின் பக்கம் நின்று பேசுகிறது “மின்னல் முரளி”

பெரிய கிராஃபிக்ஸ் காட்சிகள், கோடியில் பட்ஜெட் என்பதையெல்லாம் நம்பாதவர்கள் மல்லு இயக்குநர்கள். கிட்டத்தட்ட சூப்பர் ஹீரோ கதைக்கும் கூட  அதெல்லாம் தேவைப்படவில்லை என்பதே பாராட்டுக்குரியது..

கதையை நம்பியே பயணித்திருக்கிறார்கள். அது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. சொல்லப்போனால் ஹாலிவுட்டின் கதை வடிவத்தை மின்னல் முரளியில் பார்க்கமுடியும். சோமசுந்தரத்தின் கதாபாத்திரம் டார்க் நைட்டில் நடித்துள்ள ஹீத் லேட்ஜரை (Heath Ledger) நியாபகப்படுத்துகிறது. வில்லன் கதாபாத்திரத்துக்கு சொல்லப்படும் கதையும், உளவியல் சிக்கல்களும் பிரதானப்படுத்தப்பட்டிருப்பது கதையின் தரத்தை கூட்டுகிறது.


துடிப்பான இளைஞனாக, டீசர்ட்டுக்கு பொருந்தாத பேண்ட் அணிந்துகொண்டு ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறார் டோவினோ தாமஸ். நடிப்பில் சோகமான காட்சிகளிலும், குற்றத்தை உணர்ந்து குறுகும் காட்சிகள் என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு டஃப் கொடுத்து மிரட்டியிருக்கிறார் ஷிபு. அட்டகாசமான நடிப்பு. காதல் காட்சிகளில் உருகி வழிகிறார். விரக்தியில் உச்சம் தொடுகிறார்.

பீடித்திருக்கும் இந்த வாழ்வின் எல்லாமுமாய் இருந்த ஆறுதல் ஒன்று திடீரென்று இல்லாமல் போகும்போது, வெளிப்படும் வெறுப்பு, விரக்தி எந்த எல்லைக்கும் செல்லக்கூடியது. சரி, தவறு, நியாயம் என்பதெல்லாம் அந்த விரக்திக்கு புலப்படாது என்பது தான் ஷிபுவின் மனநிலை. அவரது காதல் அழகாக இருக்கிறது. உமாவுக்காக  அவளுக்காக கனவுக்கோட்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக கட்டியிருக்கிறார். கோட்டைகள் உடையும்போது, எல்லைக்கோடுகள் தகர்க்கப்படுகின்றன. அது நியாயங்களின் நிமித்தம்! ஷிபுவுக்கும் அப்படித்தான்.

திரைக்கதை எழுதியுள்ள அருண் அனிருதன், ஜஸ்டின் மேத்யூவுக்கு முக்கியமானதொரு படம். ஹீரோவுக்கும், வில்லனுக்குமான பாத்திர வடிவமைப்பு, அவர்களுக்கான பின்னணி கதை, சூழல் என திரைக்கதையை மெருகேற்றியிருக்கிறார்கள். இருப்பினும், ஷிபுவின் மீது பெரிய அளவில் நமக்கு கோவம் வருவதில்லை. அது அவரின் பாதிப்பினால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடு என்ற புள்ளியிலிருந்தே ஷிபுவை அணுக முடிகிறது. எதிர்மறை கதாபாத்திரத்தின் நியாயங்கள் மீட்பரான மின்னல் முரளியின் ஹீரோயிச்சத்தின் அடர்த்தியை குறைத்துவிடும் போக்கும் இறுதி காட்சிகளில் காணமுடிகிறது.

‘நீ நகர்ந்துக்கோ.. அவங்க என்னதான் டார்கெட் பண்றாங்க’ ‘யாரையும் கொல்லணும்ங்குறது என் திட்டமில்ல’ போன்ற வசனங்கள் ஷிபு கதாபாத்திரத்தை எதிர்மனநிலையிலிருந்து விலக்கியே வைக்கிறது. அதனால் மீட்பராக டோவினோ தாமஸ் உருவெடுப்பதற்கான தேவையின் முக்கியத்துவம் திரையில் அவசியப்படவில்லை என்றே தோன்றுகிறது. தவிர, சமீர் தாஹிரின் கேமிரா படத்துக்கு பலம்.

படத்தின் நீளம் குறித்தும் எடிட்டர் லிவிங்ஸ்டன் மேத்யூ யோசித்திருக்கலாம்..

சுஷின் ஷியாமின் பின்னணி இசையும், பாடல்களும் ஈர்க்கின்றன.
மொத்ததில் சூப்பர் ஹீரோ படம் என்று கூறி, கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கதையை மெருகேற்றி அதில் சூப்பர் ஹீரோ தன்மையை பொருத்தியிருந்ததில் வெற்றி பெறுகிறது மின்னல் முரளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *