• Fri. Mar 29th, 2024

தமிழ்நாடு பட்ஜெட் மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யப்படுமா?

நடப்பாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், சிறு, குறு தொழில்களை மேம்படுத்துவதற்கான அம்சங்கள் குறித்து கோவை மாவட்ட தொழிற்துறையினரின் எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், முதல்முறையாக வரும் 18-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலகையே முடக்கிப்போட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தமிழ்நாட்டின் தொழில்துறையும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, தொழில் வளம் அதிகமாக காணப்படும் மாவட்டங்களில் ஒன்றான கோவை மாவட்டத்தில் முடங்கிப்போன தொழில்கள் மீண்டுவர உதவியாக, தாட்கோ வங்கிகள் மூலம் எளிய முறையில் கடன் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நமது நாட்டில் தயாரிக்கப்படும் பம்புசெட்டுகளில், 55 சதவீத பம்புசெட்டுகள் கோவை மாவட்டத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக பம்புசெட் தொழில் வர்த்தகத்தை அதிகரிக்கவும், அதனை நம்பியுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்தவும், தனியாகத்தொழிற்பேட்டைஅமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், கடந்த சில மாதங்களாகக் காப்பர், அலுமினியம், ஸ்டீல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசுடன் இணைந்து மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்காணித்துத் தீர்வு காணும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் தொழில் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவற்றையெல்லாம் கடந்து, கோடைக்காலம் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில், காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரம் உள்ளிட்ட மாற்றுத் திட்டங்களை ஊக்குவிக்க நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கோவை மாவட்ட தொழில் துறையினர்களின் இந்த கோரிக்கைகள் அனைத்தும், தமிழ்நாடு பட்ஜெட்டில் நிறைவேற்றப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *