• Thu. Apr 25th, 2024

10.5% உள் ஒதுக்கீடு ஏன் அவசியம்? நீதிமன்றத்தில் வாதாடிய பாமக

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் பாமக தரப்பிலிருந்து அனல் பறக்கும் வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டு வழங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் பாமக ஆணித்தரமான வாதங்களை முன் வைத்தது. வன்னியர்களின் நிலை எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை விட மோசமான நிலையில் இருப்பதாக பாமக பரபரப்பாக வாதிட்டுள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அது தொடர்பான மேல்முறையீடு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன் இறுதிவாதம் நேற்று தொடங்கிய நிலையில் தமிழக அரசு தரப்பில்மனு சிங்வி, ராகேஷ் துவிவேதி, வில்சன், கிருஷ்ணமுர்த்தி உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

அதைத் தொடர்ந்து பாமக தரப்பில் இன்று பரபரப்பான வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டன. அதன்படி, வன்னியர் சமுதாய பெண்களில் 95% பேர் கூலி வேலைக்கு செல்லும் நிலையில் இருப்பதாகவும் அரைகோடி மக்கள் தொகை கொண்ட வன்னியர் சமுதாயத்தில் பலரும் வாடகை வீடுகளில் தான் வசித்து வருவதாகவும் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் பாமக வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ஏன் அவசியம் என்பதை எடுத்துரைக்கும் விதமாக இந்த வாதம் அமைந்திருந்தது. மேலும், வன்னியர் சமுதாயம் மிகப்பெரிய சமுதாயமாக இருந்தாலும் கல்வி நிலையங்களை தொடங்க முடியவில்லை என்றும் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் மிக குறைவானவர்களே சேர முடிவதாகவும் பாமக விளக்கிக் கூறியது. இதனால் இவர்களை போன்றவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு அவசியம் என வாதிட்டது.

இதேபோல் 69 சதவீத இட ஒதுக்கீடு ஒன்பதாவது அட்டவணையில் சட்ட பாதுகாப்பு பெற்றது என்றும் 10.5% இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை அது போல் இல்லை எனவும் இரண்டும் வெவ்வேறானவை எனவும் பாமக தரப்பில் வாதிடப்பட்டது. வன்னியர் சமுதாயத்தினரை பொறுத்தவரை எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை விட பல இடங்களில் மோசமான நிலையில் நடத்தப்படுகிறார்கள் என்றும் வன்னியர் சமுதாயத்தினரால் சாலை போடுதல் உள்ளிட்ட பணிகளை தான் செய்ய முடிவதாகவும் எடுத்துக்கூறப்பட்டது.

நெல்லை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பிணங்களை எரிக்கும் வெட்டியான் வேளை கூட பார்ப்பதாகவும் இந்தச்சூழலில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அவசியமானது எனவும் பாமக தரப்பில் வலியுறுத்தும் விதமாக வாதிடப்பட்டது. இதனிடையே தமிழக அரசு வாதம், பாமக வாதம், மனுதாரர்கள் வாதம் என தீர்ப்பை நோக்கி இந்த வழக்கு அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரத் தொடங்கியிருப்பதால் வன்னிய உள் இட ஒதுக்கீடு விவகாரம் மீண்டும் பரபரப்பாக பேசத் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *