மசூதிகளில் சிவலிங்கத்தை தேடவேண்டாம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், “நாட்டில் சமீபமாக சில பிரசித்த பெற்ற முஸ்லிம் கோயில்கள் தொடர்பாக சில சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. வரலாற்றை நாம் மாற்ற முடியாது. கியான்வாபி சர்ச்சை இன்றைக்கு ஏற்பட்டது அல்ல. அதற்கு இப்போதைய முஸ்லிம்களோ, இப்போதைய இந்துக்களோ காரணமாக முடியாது. இது எப்போதோ நடந்த சம்பவம். இஸ்லாம் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்த மதம். அடக்கி ஆள நினைத்தவர்கள் கொண்டுவந்த மதம். அப்போது விடுதலை வேட்கையில் இருந்து நம் நாட்டு மக்களை உணர்வுபூர்வமாக தாக்க தேவஸ்தானங்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கோயில்கள் அழிக்கப்பட்டன.
சில இந்துக் கோயில்களுக்கு சிறப்பு அந்தஸ்து இருக்கிறது. அதாவது கியான்வாபி போல் இந்துக் கோயிலில் மசூதி இருக்கிறது. இதைத் தான் தற்போது இந்து சமூகத்தினர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனரே தவிர இந்துக்கள் முஸ்லிகளுக்கு எதிராக இல்லை. ஏனெனில் இப்போதைய முஸ்லிம்களின் மூதாதையர்கள் எல்லோரும் இந்துக்களாக தானே இருந்தனர்.
ஒருசில இடங்களில் நமக்கு நம்பிக்கை இருக்கலாம். அதைப்பற்றி நாம் பேசலாம். அதற்காக தினமும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்த அவசியம் என்னவிருக்கிறது. ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தை தேட வேண்டும்.
கியான்வாபி சர்ச்சையில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவு எட்டப்பட வேண்டும். ஒருவேளை முடிவை எட்ட முடியவில்லை என்றால் தான் மக்கள் நீதிமன்றத்தை அணுகுகின்றனர். நீதிமன்றம் என்ன முடிவு செய்தாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது நீதித்துறையை நாம் புனிதமாக கருத வேண்டும். அதன் முடிவுகளை நாம் கேள்விக்கு உள்ளாக்கக் கூடாது.
ஆர்எஸ்எஸ் எந்தவிதமான மத வழிபாட்டுக்கும் எதிரானது அல்ல. நாங்கள் எல்லா மத வழிபாட்டையும் புனிதமானதாகவே கருதுகிறோம். சிலர் முஸ்லிம் வழிபாட்டு முறையை தேர்ந்தெடுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவருமே ரிஷிகளின், முனிகளின், சத்ரியர்களின் வழித்தோன்றல் தானே. நம் எல்லோருக்கும் ஒரே மூதாதையர் தான்” என்றார்.
கியான்வாபி சர்ச்சை, கிருஷ்ண ஜென்ம பூமி சர்ச்சை என பல்வேறு சர்ச்சைகளும் பெரிதாகி வரும் நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சு கவனம் பெற்றுள்ளது.