ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து பேசினார்.
சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் பேசும்போது..நான் அரசியல் பணியில் ஈடுபடும்போது கொரோனா இரண்டாவது அலை தொடங்கி விட்டது. நான் அந்தச் சமயத்தில் வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கப்படும் என்று மருத்துவர் கூறினார். அப்படி செல்வதாக இருந்தால் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்டவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் சென்றால் முதலில் என் முககவசத்தை கழற்ற வேண்டியிருக்கும். அதேபோல் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் இயலாத காரியம். இதை எப்படி மக்களிடம் சொல்வது என்ற யோசனையில் இருந்தேன். அப்போது என்னுடைய மருத்துவர், ‘யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அவர்களிடம் நான் கூறுகிறேன். ரசிகர்களிடம் நான் விளக்கம் அளிக்கிறேன்’ என்று கூறி எனக்கு துணையாக நின்றார். அதன்பிறகு தான் அரசியலில் இருந்து விலகுவதாக நான் அறிவித்தேன் என தெரிவித்தார்.