• Thu. Apr 25th, 2024

யார் பணக்காரர்கள் தெரியுமா?- அண்ணாமலை விளக்கம்

ByA.Tamilselvan

Jun 7, 2022

தமிழகத்தில் யார்பணக்காரர்கள் தெரியுமா? என்ற கேள்விக்கு ரூசிகர விளக்கம் அளித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் இணையும் விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;
“இந்தியாவில் விவசாயிகளுக்காக உள்ள ஒரே கட்சி பாஜக மட்டும்தான். பிரதமர் மோடியின் ஒவ்வொரு திட்டமும் விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
2016 முதல் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் மண்வள அட்டை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டில் 11 கோடி விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இங்குள்ள விவசாயிகள் மண்வள அட்டை பெறாவிட்டால் கட்சியினரிடம் கூறி இலவசமாக பெறலாம். மண்ணின் வளம், என்ன விவசாயம் செய்யலாம் என அனைத்து விவரமும் அதில் வரும்.
ராமநாதபுரம் மாவட்டம் நீர் பற்றாக்குறை உள்ள மாவட்டம். காமராஜர் அணைகளை கட்டினார். குளம், கிணறுகளை வெட்டினார். அவருக்கு பின் வந்த ஆட்சியாளர்களோ, இப்போது உள்ள ஆட்சியாளர்களோ எதுவும் செய்யவில்லை.அவர் உருவாக்கிய ஒரு குளத்தை தூர்வார கூட இவர்களால் முடியவில்லை. தூர்வாருவதற்கு 100 சதவீதம் பணத்தை மத்திய அரசு கொடுப்பதற்கு தயாராக இருந்தாலும் கூட தமிழக அரசு தூர்வாரவில்லை. இதனால் விவசாய நிலங்கள் தண்ணீர் வசதி இல்லாமல் போனது.இதற்காக சொட்டுநீர் பாசனத்தை 80 சதவீதம் மானியத்தில் பிரதமர் தந்துள்ளார். ரியல் எஸ்டேட் நடத்துவோர் தான் தமிழகத்தில் பணக்காரர்கள். எங்கேயும் விவசாயி பணக்காரனாக இல்லை. ஒரு துளி வியர்வை சிந்தாதவர்கள் தான் பணக்காரர்கள்.
இதை மாற்ற, விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டம் என்ற பெயரில் ஓராண்டிற்கு 6000 ரூபாயை விவசாயிகள் வங்கி கணக்கில் பிரதமர் செலுத்தி வருகிறார். தமிழகத்தில் சிறு குறு விவசாயிகள் 38 லட்சம் பேர் இதை பெற்றுள்ளனர்.விவசாயிகளுக்கு விவசாயி கிரெடிட் கார்டு’ வழங்கி உள்ளார். இதன் மூலம் ஒரு விவசாயி கூட்டுறவு வங்கியில் ரூ.1 லட்சம் வரை கடன் பெற முடியும். முறையாக கடனை திருப்பி செலுத்தினால் ரூ.5 லட்சம் வரை பெற முடியும்.
மாதம் 30 காசு வட்டியில் இந்த கடனை பெறலாம். விவசாய பொருளை அதிக விலைக்கு விற்க, பாதுகாக்க குளிர்சாதன கிடங்குகள் அமைத்து வருகிறார். இலவசமாக இதை பயன்படுத்தலாம்” என்று அண்ணாமலை பேசினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *