• Fri. Mar 29th, 2024

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை யார்..?
நள்ளிரவு வரை நீடித்த ஆலோசனை..!

Byவிஷா

Jun 19, 2022

அ.இ.அ.தி.மு.க.வில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தொடர் குழப்பங்களும் மோதல்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்ற சில தினங்களிலேயே சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகள் உருவாகி பின்னர் மீண்டும் இணைந்தது. அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இடங்கள் உருவாக்கப்பட்டு ஓபிஎஸ், இபிஎஸ் என இரட்டை தலைமையில் அதிமுக செயல்பட்டு வந்தது. இந்த இரட்டை தலைமையில் சந்தித்த நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் படு தோல்வியை அதிமுக சந்தித்ததையடுத்து ஒற்றை தலைமை என்னும் முழக்கமும், இரட்டை தலைமையால் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட முடியாமல் பின்னடைவை அதிமுக சந்தித்தாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னோட்டமாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக குரல் எழுந்தது. பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் தனது ஆதரவு நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார். இருந்த போதும் எடப்பாடிக்கு 50க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களும் ஓபிஎஸ்க்கு 10 முதல் 15 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று நள்ளிரவு வரை இரண்டு தரப்பும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சிவி.சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இபிஎஸ் இல்லத்திலும், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஓபிஎஸ் இல்லத்திலும் ஆலோசனை நடத்தினர். இதில் ஒற்றை தலைமை தொடர்பாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. எடப்பாடிக்கு 50க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் பொருளாளர் பதவி அல்லது அவைத்தலைவர் பதவி ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டு அமைதி காப்பாரா? அல்லது மீண்டும் தர்ம யுத்தம் தொடங்குவரா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *