மதுரை மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா குடும்பத்திலிருந்து மேயர் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்று பலரும் ஆரூடம் சொன்னார்கள்.
ஆனால், அறிவிக்கப்பட்ட கவுன்சிலர் வேட்பாளர் பட்டியலை பார்த்து அனைவரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள். அதில் அவர்களின் குடும்பத்தினர் பெயர் ஏதுமில்லை. “அதிமுக வெற்றி பெற்றால், முன்னாள் மண்டலத் தலைவர் சண்முகவள்ளி, முன்னாள் கவுன்சிலர்கள் சுகந்தி அசோக், சண்முகப்பிரியா ஹோசிமின் ஆகியோர்களில் ஒருவருக்கே மேயர் பதவி கிடைக்கும். அந்தளவுக்கு அவர்கள் இப்போதே காய் நகர்த்தி வருகிறார்கள்” என்கிறார்கள் மதுரை அதிமுக-வினர்.
சண்முகவள்ளி ஏற்கனவே மாநகராட்சி மண்டலத் தலைவராக இருந்தவர். செல்லூர் ராஜூவின் தீவிர ஆதரவாளர். இதேபோல் சுகந்தி அசோக், ஏற்கனவே கவுன்சிலராக வெற்றி பெற்று மாநகராட்சியில் கல்விக்குழு தலைவராக இருந்தவர். அடுத்து முன்னாள் கவுன்சிலர் சண்முகப்பிரியா ஹோசிமின், மகளிரணியில் மாவட்ட நிர்வாகியாக இருந்தவர்.
இந்த மூவரில் ஒருவருக்குதான் மேயர் பதவி கொடுக்கப்படும், காரணம், மூவரும் செல்லூர் ராஜூவின் ஆதரவை பெற்றவர்கள் என்கிறார்கள். அதேநேரம் கட்சியில் மற்றொரு தரப்பினர் இவர்கள் மீது அதிருப்தியும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த முறை அதிமுக தரப்பில் இருந்து செல்லூர் ராஜுகுரல் மட்டுமே மதுரையில் ஒலிக்க துவங்கி உள்ளது. மதுரை அதிமுகவின் மும்மூர்த்திகள் என்று கருதப்படும் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ,ராஜன் செல்லப்பா ஆகியோரில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னிருந்தே ஒரு அமைதியான நிலைபாட்டை கையாண்டு வருகின்றனர். கட்சியும் செல்வாக்கு இல்லை ,எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் மக்கள் மத்தியில் இழந்து விட்டது. மதுரையில் பாஜகவின் ஆட்டம் சற்று அதிகரித்துள்ளதும் இதற்கு காரணம் என்கின்றனர். அதன் காரணமாகவே நயினார் நாகேந்திரன் பேசிய போது கூட பெரிய அளவில் தென் தமிழகத்தில் இருந்து குறிப்பாக மதுரையில் எந்த சத்தமும் வெளிவரவில்லை. இவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கைது படலம் ஒரு பாடமாக வந்து வந்து செல்வதால் வடிவேலு கூறுவது போல நாம யாரு வம்புதும்புக்கும் போறது இல்ல , நாம உண்டு நம்ம வேல உண்டுனு இருந்துடணும்” என மதுரை அதிமுகவினர் தங்களுக்குள்ளேயே ஒரு வாய்ப்பூட்டை போட்டுகொண்டு அமைதியாகி விட்டனர்.