கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்ற போட்டிகளுக்கு நடுவில், தற்போது சித்தராமைய்யா முதலமைச்சராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் வரும் சனிக்கிழமை அன்று பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகா மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றித் தனிப் பெரும்பான்மை பெற்றது. முதல்வர் பதவியைக் கைப்பற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா, கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம் பி .பாட்டில் ஆகியோர் இடையே போட்டி ஏற்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், புதிய முதல்வரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தைக் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வுக்கு வழங்கி கடந்த 14-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றினர். இதையொட்டி டில்லி சென்ற மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, வேணு கோபால், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இன்று யார் முதலமைச்சர் என்கிற தகவல் வெளியியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராகவும் பணியாற்ற இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து வரும் 20ம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இன்று இரவு 7 மணிக்கு காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டமும் நடைபெறுகிறது