ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் நடைபெற்ற திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த பொது மக்களுக்கு டோக்கன் முறையில் பணம் வினியோகம் செய்யப்பட்டது. இதை வாங்குவதற்கு போட்டி ஏற்பட்டதால் நெரிசலில் சிலர் கீழே விழுந்தனர். மறுபுறம் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பலூன்களுக்கு சிறுவர்கள் சண்டையிட்டனர். காவல் துறையினர் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் கலந்து கொண்ட மக்கள் அனைவருக்கும் மேடைக்கு முன்புறம் வைத்து டோக்கன் முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
ஒருவர் டோக்கன் அளித்ததும், மறு புறம் நின்றிருந்தவர் டோக்கனை பெற்றுக் கொண்டு பணம் வழங்கினார். தொடக்கத்தில் பொறுமையாக பணம் வாங்கிக் கொண்டிருந்த மக்கள், சிறிது நேரத்திற்கு பின்னர் பொறுமை இழந்து டோக்கன் பெறுவதற்கு போட்டி போட்டனர்.
சிலர் முண்டி அடித்துக் கொண்டு டோக்கனை பெற்றுச் சென்றனர். இதனால் மேடையின் முன்பாக நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் தெருவோரம் இருந்த கழிவுநீர் கால்வாயினுள் விழுந்ததால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டோக்கன் கிடைக்காத சிலர் வழங்கியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பொது மக்களை சமாளிக்க முடியாமல் டோக்கன் வழங்கியவர் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றார். இருந்த போதிலும் அவரை விடாமல் மக்கள் பின் தொடர்ந்து சென்று டோக்கன்களை பெற்று சென்றனர்.மறுபுறம் மேடையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பலூன்களை எடுத்து செல்வதற்கு சிறுவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.பாதுகாப்புக்கு வந்திருந்த கீழராஜ குலராமன் காவல் துறையினர் எதையும் கவனிக்காமல் கண்டும் காணமல் நடந்து கொண்டது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.