உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம்தான் புகார் சொல்ல வேண்டுமே தவிர தங்களிடம் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலடி கொடுத்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வீடியோக்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அண்ணாமலை. அத்துடன் @ECISVEEP என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் ஐடியை சேர்த்து, வாக்கு எண்ணிக்கை நாளன்று தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டிருக்கக் கூடாது எனவும் அந்த ட்விட்டர் பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தமது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலையின் @annamalai_k ட்விட்டர் ஐடிக்கு பதில் அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையம் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவது இல்லை. இந்த தேர்தல்களை வேறு அதிகாரிகள்தான் நடத்துகின்றனர். அரசியல் சாசனத்தின் 243 K , 243 ZA கீழ் மாநிலங்களின் தேர்தல் ஆணையங்கள் உள்ளன. உங்கள் புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் உங்களுக்கு தெரியுமா? என்ற தலைப்பில் ஒரு படத்தையும் தலைமை தேர்தல் ஆணையம் இணைத்துள்ளது. அதில் அரசியல் சாசனத்தின் 324-ன் படி தலைமை தேர்தல் ஆணையம் எந்தெந்த தேர்தல்களை நடத்தும் என்கிற பட்டியலை கொடுத்திருப்பதுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் வராது என்றும் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி உள்ளது.