• Tue. Apr 23rd, 2024

தனியார் நிதி நிறுவனங்கள் நடத்தி கோடிகளில் மோசடி

ரூ.200 கோடிக்கு மேல் மோசடி செய்த திருச்சியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தைக் கண்டித்து, மதுரை – ஒத்தக்கடையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்டோருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனங்களை நடத்திய சாத்தூரைச் சேர்ந்த ராஜா, அவரது சகோதரர் ரமேஷ் ஆகிய இருவரும் கவர்ச்சிகரமான திட்டங்களைக் கூறி, சுமார் ரூ.200 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில், ராஜா ரமேஷ் உள்ளிட்ட 15 பேர் மீது திருச்சி, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது.

இன்று (21-ஆம் தேதி) மோசடியால் பாதிக்கப்பட்ட சுமார் 500 பேர், தங்களது பணத்தை மீட்டுத்தரக் கோரியும், மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், உயர் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், மதுரை ஒத்தக்கடையிலிருந்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நோக்கி பேரணியில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல்துறையினர், அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

உடனே, மதுரை – ஒத்தக்கடை பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *