நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசு கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மதுரையில் எஸ்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ கோரிக்கை விடுத்தோம் என்றார்.
தமிழ்நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி கூடுதலாக வழங்க வலியுறுத்தியதாக அமைச்சர் தெரிவித்தார். நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தரவும் ஒன்றிய அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்தோம் என்றார்.
கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி வழங்க ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தி இருப்பதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் ரத்து செய்வது தொடர்பாக ஒன்றிய அரசு கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.