• Tue. Dec 10th, 2024

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை எப்போது..?

Byவிஷா

Apr 7, 2023

தமிழகத்தில் ஏப்ரல் 10 முதல் 28ம் தேதிக்குள் 4 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும், ஏப்ரல் 17 முதல் 21ம் தேதிக்குள் 1முதல் 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இறுதி தேர்வை முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வுக்கான அட்டவணை மற்றும் முடிவு தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை வெயில் அதிகமாக இருப்பதால் 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தி விடுமுறை அளிக்க வேண்டும் என அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், 1 முதல் 9ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அனைத்து அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வுகள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
அதில், தமிழகத்தில் ஏப்ரல் 10ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும், ஏப்ரல் 17 முதல் 21ம் தேதிக்குள் 1முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வை முடிக்க வேண்டும் என்றும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் வரும் ஏப்ரல் 29ஆம் தேதியில் இருந்து அடுத்த ஒரு மாதத்திற்கு கோடை விடுமுறை விடப்படும் எனத் தெரிகிறது. அதன்பிறகு ஜூன் 1 அல்லது 5ஆம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக பின்னர் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை அவர்களுக்கென்று தனி தேர்வு அட்டவணை தயாரித்து, அதன்படி நடத்தி கொள்வர். இருப்பினும் பள்ளி வேலை நாளாக ஏப்ரல் 28ஆம் தேதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் முடிவில் மாற்றம் இருக்காது என்கின்றனர்.