தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பாலை தவிர்த்து மற்ற பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஆவின் நெய்யின் விலையும் உயர்ந்துள்ளது.
இதுவரை ஆவின் நெய் கிலோ ஒன்றுக்கு ரூ. 515-க்கு விற்பனையாகி வந்த நிலையில், ரூ. 20 அதிகரிக்கப்பட்டு இனி ரூ. 535-க்கு விற்பனையாகும். இதேபோன்று 500 மில்லி தயிரின் விலை ரூ. 3 அதிகரிக்கப்பட்டு இனி ரூ. 30-க்கு விற்பனையாகும்.
கடந்த ஆண்டு ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதை தவிர்த்து மற்ற பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நுகர்வோர் சங்கத்தினர் கூறுகையில், ‘பாலைப் போல் அல்லாமல் ஆவினின் மற்ற பொருட்களை குறைந்த மக்களே பயன்டுத்துகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது’ என்று தெரிவித்தனர்
ஆவின் நெய் விலையைக் காட்டிலும் தனியார் வழங்கும் நெய்யின் விலை சற்று அதிகமாகும். திருமலா, ஜி.ஆர்.பி., ஹட்சன் நிறுவனங்கள் நெய்யை கிலோ ஒன்றுக்கு ரூ. 650 – 695 -க்கு விற்பனை செய்து வருகின்றன.
இவ்வாறு விலை வித்தியாசம் ரூ. 100-200 வரை இருக்கும்போது கள்ளச் சந்தையில் ஆவின் நெய் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆவின் அதிகாரிகள் கூறுகின்றனர். இதேபோன்று, ஆவின் நெய்யை வாங்கி, அதை மாற்று நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யும் ஆபத்தும் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்கு அதிக சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் உள்ளது.
இதேபோன்று, பால் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்ந்திருப்பதும் விலை உயர்வுக்கு ஓர் காரணமாக கூறப்படுகிறது.
சில்லறை விற்பனையில் ஆவின் பொருட்கள் ஒரு விலைக்கும், ஆன்லைன் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் இன்னொரு விலைக்கும் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இவற்றை நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.