உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 11வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனால் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தலைநகர் கீவ் மற்றும் 2வது பெரிய நகரமான கார்கீவ் நகரில் உள்ள அரசு கட்டிடங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், காவல்துறை அலுவலகங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா.
உக்ரைன் வான்வெளியும் தடை செய்யப்பட்டிருப்பதால் ‘அபரேஷன் கங்கா’ திட்டம் மூலம், அங்குள்ள இந்தியர்களை தரை வழியாக அண்டை நாடுகளான உர்மேனியா, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளுக்கு அழைத்து வந்து, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா அழைத்து வருகிறது மத்திய அரசு. அவ்வாறு இந்தியா வரும் மாணவர்கள் டெல்லி, மும்பை விமான நிலையங்களில் தரையிரங்குகின்றனர். ஏற்கனவே உக்ரைனில் இருக்கும் தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப ஆகும் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என அறிவித்தது.
அதன்படி இந்தியா திரும்பியுள்ள தமிழக மாணவர்களின் பயண செலவுக்கு முதல் கட்டமாக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், அயலகவாழ் தமிழர்நல ஆணையம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உக்ரைனின் அண்டை நாடுகளிலிருந்து டெல்லி வரும் தமிழக மாணவர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்திருக்கிறது.
மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல் மற்றும் சிறப்பு குழுவிற்க்கான பயணச்செலவு என ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி உடனடியாக மீட்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைனின் அண்டை நாடுகளில் உள்ள தமிழக மாணவர்களை அந்தந்த நாட்டு தூதரக அதிகாரிகளை சந்தித்து விரைந்து மீட்பதற்காக ஏற்கனவே எம்.பிக்கள், எம்.எல்.ஏ, ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழு நேற்று டெல்லியில் வெளியுறவு அமைச்சரை சந்தித்து தமிழக மாணவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது.