• Sat. Apr 20th, 2024

விஜய்க்கு என்ன கொள்கை, கோட்பாடு இருக்கிறது..?
சீமான் கேள்வி..!

நடிகர் விஜய்க்கு என்ன கொள்கை, கோட்பாடு இருக்கிறது..” என்று ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம்’ உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு சீமான் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

சீமான் இது குறித்துப் பேசும்போது, விஜய் என்னுடைய தம்பி. கோட்பாட்டு அளவில் நான் வேறு, அவர் வேறு. என்னுடைய தலைவர் பிரபாகரன். அவரைப் பற்றி விஜய் இதுவரையிலும் ஏதாவது பேசியிருக்கிறாரா.. அல்லது இனிமேல்தான் பேசுவாரா? என் நிலத்தைக் காப்பாற்ற நான் துடிக்கிறேன். ஆற்று மணலை விற்பனை செய்வதைக் கண்டித்திருக்கிறாரா? நீரை உறிஞ்சி விற்பதை கூடாது என்று சொல்லியிருக்காரா..? அவருடைய கோட்பாடு என்னவென்று தெரியாமல் அவருக்கும் எனக்கும் போட்டி என்று நீங்கள் எப்படி சொல்வீர்கள் ..? பாரதிய ஜனதா உட்பட இந்தியாவை ஆண்ட கட்சி, ஆள்கின்ற கட்சிகளை எதிர்த்து பேசி வருகிறேன். ஒரு நடிகராக எம்ஜிஆர் வென்றதற்கு காரணங்கள் இருக்கிறது. பெரியார், அண்ணா, முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட தலைவர்கள் மரணித்துவிட்டார்கள். அந்த இடம் காலியாகிவிட்டது.
கருணாநிதி மட்டும்தான் ஆட்சியில் இருந்தார். அவரை எதிர்க்க வலிமையான ஆற்றல் தேவைப்பட்டது. எம்ஜிஆருக்கே முதலில் தயக்கம் இருந்தது. ரசிகர்கள் கொடுத்த நம்பிக்கையால் அரசியல் களமிறங்கி வென்று காட்டினார். ஒரே தேர்தலில் நின்று ஜெயித்து ஆட்சி அமைக்கும் வரலாறு இனி தமிழகத்தில் நிகழ சாத்தியமில்லை.இதைவிட புகழ் பெற்ற நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாணால்கூட அரசியலில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எம்.ஜி.ஆர். மற்றும் என்.டி.ஆர். வந்ததுகூட ஒரு விபத்துதான். விபத்து வேறு. விதி வேறு.
கமல்ஹாசன் 5 வயதிலிருந்து நடிக்கிறார். அவர் உலகப் புகழ் பெற்ற நடிகர். அவரையே மக்கள் அங்கீகரிக்கவில்லை. ரஜினிகாந்த்தும் விலகிவிட்டார். என் தம்பி விஜய் இப்போது அரசியலுக்கு வந்தாலும், அவர் என்ன கொள்கை, கோட்பாட்டை முன் வைக்கிறார் என்பதுதான் முக்கியம்…” என்று தெரிவித்தார் சீமான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *