சுற்றுச்சூழல் சீர்கேட்டின் காரணமாக உலகம் முழுவதும் அசாதாரணமான வகையில் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதோவொரு மூலையில் 23 ஹெக்டேர் நிலம் வளத்தை இழந்தும் மரங்களை இழந்தும் பாலையாகிக் கொண்டிருக்கிறது என ஐ.நா முன்பே எச்சரித்தது.
அதுமட்டுமின்றி, பனிப்பாறைகள் உருகி உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள் நீரில் முழ்கும் என்றும் எச்சரித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் நீர்மட்ட உயர்வால் இன்னும் 9 ஆண்டுகளில் 60% கடற்கரைகள் காணாமல் போகும் என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலை ஒன்றிய அரசின் ஒன்றிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த நாடாளுமன்ற அமர்வில் தாக்கல் செய்திருந்தது. மேலும் அந்தத் தகவலில், காலநிலை மாற்றத்தால் கடல்மட்டம் உயர்ந்தவண்ணம் உள்ளது. இதனால் இந்தியாவின், குறிப்பாக மேற்கு கடற்கரையில் உள்ள 34 சதவீத கடற்கரை கடல்நீரால் அரிக்கப்பட வாய்ப்பு உள்ளது என கண்காணிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, மேற்கு கடற்கரை மிக அதிகமாக 60.5 சதவீத அளவுக்கு கடலால் அரிக்கப்படலாம். மேலும் இந்தியாவின் மொத்தமுள்ள கடற்கரைகளில் 6,907 கி.மீ நீளம் கொண்ட கடற்கரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரையிலான காலக்கட்டத்தில் 2,318 கி.மீ நீளக் கடற்கரை கடலால் அரிக்கப்பட்டுள்ளது. வெறும் 2,733 கி.மீ நீளக் கடற்கரை மட்டுமே கடல் அரிப்பில் சிக்காமல் உறுதியாக உள்ளதாக தெரியவந்துள்ளது. அதேவேளையில் கேரளாவில் கடற்கரை உறுதியாக இருக்கும்.
அதுமட்டுமல்லாது, கடல் நீர் மட்டம் அதிகரிப்பது குறையவில்லை என்றால் மும்பை, நவி மும்பை கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள், 2030ம் ஆண்டுக்குள் கடல்மட்டத்திற்குள் கீழே சென்றுவிடும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.