கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து உடுப்பியில் உள்ள லாட்ஜில் நேற்று ஒப்பந்ததாரர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ள நிலையில், ஈஸ்வரப்பா , அவரது கூட்டாளிகள் இருவரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் இந்தலகா பகுதியைச் சேர்ந்தவரான சந்தோஷ் பாட்டில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
மேலும் தீவிர பாஜக தொண்டரான இவர் அப்பகுதிகளில் பல்வேறு பணிகளை எடுத்து செய்து வருகிறார். நேற்று முன் தினம் சந்தோஷ் பாட்டில் திடீரென மாயமான நிலையில், அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் மாயமான பாட்டீல் உடுப்பியில் உள்ள தனியார் லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டது தெரிவந்தது. இதனையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய போலிசார் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தற்கொலைக்கு முன்னதாக பாட்டீல் இன்று அதிகாலை மீடியாக்களுக்கும் அவரது நண்பர்களுக்கும் சில செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது, அவர் தற்கொலை செய்து கொள்வதாகவும், அவரது மரணத்திற்கு கர்நாடக அமைச்சரான ஈஷ்வரப்பா தான் காரணம் என்றும் அதில் குற்றம் சாட்டியிருந்தார்.
அதில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் அவர் மேற்கொண்ட 4 கோடி ரூபாய் பணிகளில் அமைச்சரின் கூட்டாளிகள் 40 சதவீதம் கமிஷன் கேட்டதாக பாட்டீல் குற்றம் சாட்டியிருந்தார். “எனது மரணத்திற்கு ஆர்.டி.பி.ஆர் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மட்டுமே காரணம். எனது அபிலாஷைகளை ஒதுக்கி வைத்து இந்த முடிவை எடுக்கிறேன். பிரதமர், முதல்வர், நமது அன்புக்குரிய தலைவர் பிஎஸ்ஒய் மற்றும் அனைவரும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். என்றும் அவர் எழுதியிருந்தார்.
இதற்கிடையில் அமைச்சர் ஈஸ்வரப்பா நேற்று சந்தோஷ் பாட்டீலை தெரியாது என்று மீண்டும் வலியுறுத்தினார். மேலும் பாட்டீலின் மரணம் தொடர்பாக அவர் ராஜினாமா செய்யக் கோரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் கோரிக்கையை நிராகரித்தார். ஒப்பந்ததாரர் மரணம் குறித்து விரைவான மற்றும் வெளிப்படையான விசாரணையை உறுதி செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று தெரிவித்தார். மேலும் இந்த குற்றச்சாட்டை ஈஸ்வரப்பா மறுத்துள்ளார். குற்றச்சாட்டை சுமத்திய சந்தோஷ் மீது அமைச்சர் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார், விசாரணையில் உண்மை வெளிவரும் என்று பொம்மை தெரிவித்தார்.
இந்நிலையில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டது தொடர்பான வழக்கில் உடுப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த எஃப்.ஐ.ஆரில் காண்டிராக்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டதாகவும், சந்தோஷ் பாட்டீலின் சகோதரர் பிரசாந்த் அளித்த புகாரின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளான பசவராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோரும் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.