• Fri. Apr 19th, 2024

பாஜகவுடன் 25 ஆண்டுகள் வீணடித்துவிட்டோம்: உத்தவ் தாக்கரே

இந்துத்துவ கொள்கையை சந்தர்ப்பவாத அரசியலுக்காகப் பயன்படுத்தும் பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டோம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
சிவ சேனா கட்சி நிறுவனராக பால் தாக்கரேவின் 96வது பிறந்தநாளை ஒட்டி இணையவழியில் நடந்த விழாவில் பேசிய உத்தவ் தாக்கரே இவ்வாறு கூறினார்.

அவருடைய பேச்சிலிருந்து:
இந்துத்துவா கொள்கையின் சக்தியை நாட்டில் வெளிப்படுத்த வேண்டும் என்பதாலேயே சிவ சேனா, பாஜகவுடன் கைகோத்தது. ஆனால், பாஜகவின் சந்தர்ப்பவாத இந்துத்துவம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான துருப்புச் சீட்டு என்பதைப் புரிந்துகொண்டேன். சிவ சேனா 25 ஆண்டுகளை பாஜகவுடன் கூட்டணி வைத்து வீணடித்துவிட்டது. பாஜகவை நாங்கள் முழு மனதாக ஆதரித்தோம். அவர்களின் தேசியக் கொள்கைகள் நிறைவேற வேண்டும் எனத் துணை நின்றோம். அவர்கள் தேசிய அளவில் செயல்பட நாங்கள் எங்கள் மண்ணில் இயங்குவோம் என நம்பினோம். ஆனால் அவர்கள் எங்களுக்குத் துரோகம் செய்தனர். எங்கள் மண்ணிலேயே எங்களை அழிக்க முயன்றனர். அதனால் நாங்கள் பதிலடி கொடுத்தோம். 2019 தேர்தலுக்குப் பின்னர் தேசியவாத காங்கிரஸுடனும் காங்கிரஸ் கட்சியுடனும் இணைந்தோம். மஹா விகாஸ் அகதியை உருவாக்கியுள்ளோம்.

பாஜக தன்னுடைய அரசியல் சவுகரியங்களுக்கு ஏற்ப கூட்டணிக் கட்சிகளை காலைவாரிவிடுகிறது. சிவ சேனா அதிகாரத்திற்காக இந்துத்துவா கொள்கையையே கைவிட்டுவிட்டது. நாங்கள் அதனால் பாஜகவை துறந்துள்ளோமே தவிர இந்துத்துவா கொள்கையை அல்ல. சிவ சேனா தனது வேரை மகாராஷ்டிராவைத் தாண்டி நீட்டிக்க வேண்டும். டெல்லியைக் கைப்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பாஜகவை சரமாரியாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *