விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் மேகநாதரெட்டி, ஆகியோர்கள் முன்னிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வுசெய்தார்.
அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மாதே அள்ளியில் நடைபெற்ற கோவில் தேரோட்டத்தின்போது எதிர்பாராமல் விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விபத்து என்பது உண்மையிலே மிகப் பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எதிர்பாராத விதமாக நடைபெறும் இந்த விபத்துக்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தேரையும் தேர் வரும் பாதையையும் ஒருமுறை மட்டுமல்லாமல் 2, 3 முறை ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். இனிமேல் இதுபோன்ற விபத்து நடைபெறாமல் இருக்க அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒரு சில மடாதிபதிகளை தவிர்த்து அனைத்து மடாதிபதிகளையும் குறை சொல்ல முடியாது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர், என்னிடம் பல கோரிக்கைகளை வைத்துள்ளார். அதற்கு உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற சுமுகமான சூழ்நிலைகளை கடைபிடிக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஜீயர்கள், மடாதிபதிகள் ஆகியோருக்கு கோவில்களில் உரிய மரியாதை கிடைக்கிறது. வரும் காலங்களிலும் அதனை மேற்கொள்ள அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்படும். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தை பொறுத்தவரை அதனை சீரமைக்க திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.98 லட்சம் டெண்டரும் விடப்பட்டுள்ளது. அதனை கோவில் நிதியிலிருந்து செய்வதா? அறநிலையத்துறை ஆணையாளர் நிதியிலிருந்து செய்வதா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. ஜீயர் விரும்புகிறபடி அதனை சீரமைத்து, புனரமைத்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தேரையும்,தேர் வரும் பாதையை 2, 3 முறை ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்- அமைச்சர் சேகர்பாபு
