

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை பதவியில் இருந்து நீக்க கோரி அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை பேரவை செயலரிடம் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் 11-1-25 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 68-ன்படி கடிதம் வழங்கியுள்ளார். அதில், ‘சட்டப்பேரவையில் அதிமுகவினர் அதிக நேரம் பேச அப்பாவு அனுமதிப்பது இல்லை. அதிமுகவினர் பேசுவதை ஒளிபரப்புவது இல்லை. பாரபட்சத்துடன் செயல்படும் அவரை நீக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 14, 15-ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், அந்த தீர்மானம் 17-ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று அலுவல் ஆய்வு குழு கூட்டத்தின் முடிவில் அப்பாவு தெரிவித்தார் அதன்படி, பேரவை தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.
இன்று காலை அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். தொடர்ந்து கேள்வி நேரம், நேரமில்லா நேரம் (ஜீரோ ஹவர்) இடம்பெறும். அப்போது, தனது தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறு ஆர்.பி.உதயகுமார் கோரலாம். இல்லாவிட்டால், வாக்கெடுப்புக்கு நேரம் ஒதுக்குமாறு கோரலாம்.
தீர்மானம் உடனே எடுக்கப்பட்டால், பேரவை தலைவர் இருக்கையில் இருந்து அப்பாவு வெளியே சென்றுவிடுவார். அவையை பேரவை துணைத் தலைவர் அல்லது வேறொருவர் நடத்துவார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது உதயகுமார் பேசுவார். அதற்கு முதல்வரோ, அவை முன்னவரோ பதில் அளிப்பார்கள். பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, பேரவை துணைத் தலைவர் தீர்ப்பளிப்பார்.
சட்டப்பேரவையில் தற்போது திமுகவின் பலம் 133, அதிமுகவின் பலம் 66 ஆக உள்ளது. எனவே, அதிமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறாது என்று திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

