• Thu. Apr 25th, 2024

மதுரை மாவட்டத்தில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு ஓய்ந்தது!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மதுரை மாவட்டத்தில் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

குறிப்பிடத்தக்க அளவில் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஐந்து மணியிலிருந்து 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களின் வருகை பெரும்பாலான வாக்குச் சாவடிகளிலும் மையங்களிலும் குறைவாகவே இருந்தது.

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் ஐந்து வாக்குச்சாவடிகள் இடம்பெற்றிருந்தன. அதில் 363ஆம் எண் உள்ள வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1, 141 என்றிருந்த நிலையில் வாக்குப் பதிவு நேரம் முடியும் வரை 551 வாக்குகளே பதிவாகியிருந்தன. அக்குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் தேர்தல் அலுவலர் முறையாக வாக்குப் பெட்டிக்கு பிற அலுவலர்கள் முன்னிலையில் சீல் வைத்து வாக்குப் பதிவை நிறைவு செய்தார்.

மதுரை மாவட்டம் முழுவதும் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில் அனைத்து வாக்கு மையங்களில் இருந்து லாரிகள் மூலம் அந்தந்த வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பப்பட்டன. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் பாத்திமா கல்லூரி, வக்ஃபு வாரிய கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் எண்ணப்பட உள்ளதால், மேற்கண்ட கல்லூரிகளுக்கு பதிவான வாக்கு பெட்டிகள் அனைத்தும் அனுப்பப்பட்டன.

வருகின்ற 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *