• Sat. Apr 27th, 2024

மதுரையில் ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜக முகவர் கைது

மதுரை மேலூர் நகராட்சியின் வார்டு 8-இல் முஸ்லிம் வாக்காளரின் ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜக முகவர் கிரிராஜனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலூர் நகராட்சியிலுள்ள அல்-அமீன் உயர்நிலைப் பள்ளியில் வாக்களிக்க முஸ்லிம் பெண்கள் முகக் கவசங்களுடன் பர்தாவும் அணிந்து வந்தனர். பாஜக வாக்குச் சாவடி முகவர் கிரிராஜ் என்பவர், முஸ்லிம் பெண் ஒருவரிடம் வாக்காளர் பட்டியலிலுள்ள புகைப்படத்தை சரிபார்க்க முகக் கவசம் மற்றும் ஹிஜாபை அகற்றக் கூறியிருக்கிறார். ஹிஜாப் அணிந்திருப்பதால், புகைப்படத்தை சரிபார்க்க முடியவில்லை என்ற அவர் இதன் நீட்சியாக ‘கள்ள ஓட்டு’ பதிவாகக்கூடும் என்றும் கூறியிருக்கிறார்.

இதனிடையே வாக்குச் சாவடி அதிகாரிகள், திமுக, அதிமுக மற்றும் மற்ற கட்சி வாக்குச் சாவடி முகவர்கள் இதில் தலையிட்டு வேறு வாக்குச் சாவடி முகவரை மாற்றுமாறு பாஜகவைக் கேட்டுக்கொண்டனர். இதனால், வாக்குப் பதிவு 15 நிமிடங்கள் தடைபட்டு, பாஜக வாக்குச் சாவடி முகவர் மாற்றப்பட்டு பின்னர் தொடங்கியது. இதனால், அங்கு லேசான பதற்றம் நிலவியது.
இந்த நிலையில், பாஜக வாக்குச் சாவடி முகவர் கிரிராஜனை மதுரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *