விருதுநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் குறைவாகவும், உப்பு நீராகவும் வழங்குவதை கண்டித்து, நகர்மன்றத் தலைவரை முற்றுகையிட்டு உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் நகராட்சியில் சாதாரணக் கூட்டம் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் தட்சணாமூர்த்தி, பொறியாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவாதம் பின் வருமாறு:
“நகராட்சியில் பேட்டரியில் இயங்கும் குப்பை வண்டிகள் ஏற்கனவே 57 உள்ளதாக தெரிவித்த நிலையில், தற்போது 45 வண்டிகள் மட்டுமே 2018 ஆம் ஆண்டு வாங்கப்பட்டதாக மன்ற பொருளில் கூறப்பட்டுள்ளது ஏன்?. தற்போது எத்தனை பேட்டரி வண்டிகள் இயங்குகின்றன. பல துப்புரவுத் தொழிலாளர்கள் வாடகைக்கு தள்ளு வண்டியை எடுத்து குப்பைகளை சேகரிக்கின்றனர் ஏன்? என உறுப்பினர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், தற்போது 36 வண்டிகள் மட்டுமே இயங்குவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, உறுப்பினர்கள் ரம்யா, பணப்பாண்டி, ராமலட்சுமி ஆகியோர் தங்களது வார்டுகளில் சரிவர குப்பைகளை வாங்கவில்லையெனவும் புகார் தெரிவித்தனர். அதன் பிறகு பேட்டரி வாகனத்தை பழுது நீக்கம் செய்யும் ஒப்பந்தகாரர் சரிவர பணிகள் செய்கிறாரா எனத் தெரியவில்லை. எனவே, நேரில் வரச் சொல்லுங்கள் என தலைவர் பதிலளித்தார்.
விருதுநகர் பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டில் வழங்கிய 57 விளக்குகளை தற்போது வரை பொருத்தவில்லையென காங்கிரஸ் உறுப்பினர்கள் பால்பாண்டி, பேபி, ரம்யா, சித்தேஸ்வரி உள்ளிட்டோர் நகராட்சித் தலைவரிடம் நின்று போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, நகராட்சி பொறியாளர், மின்சார வாரியத்திற்கு நகராட்சி ரூ.4.4 கோடி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், புதிய இணைப்புகள் வழங்க மறுக்கின்றனர் என பதில் கூறினார். பின்பு, இரு வாரங்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் பதில் அளித்தார்.
குடிநீர் ஒரு பகுதிக்கு 90 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுவதால் பல குடியிருப்புகளுக்கு குடிநீர் செல்லவில்லை. நகர்மன்ற உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என உறுப்பினர்கள் பலர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஆணையாளர், நகராட்சி நிர்வாக இயக்குநரின் அறிவுறுத்தலின்படி குடிநீர் விடும் நேரம் குறைக்கப்பட்டது என தெரிவித்தார். இதையடுத்து, திமுக, அதிமுக, அமமுக மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் அனைவரும் நகராட்சித் தலைவரை முற்றுகையிட்டனர். பின்பு, வாரம் ஒருமுறை கூடுதலான நேரம் குடிநீர் வழங்கப்படும் என தலைவர் பதிலளித்தார்.
விருதுநகரின் மேற்கு பகுதியில் உப்பு சுவையுடன் கூடிய குடிநீர் வழங்கப்படுகிறது. அதேவேளைஇ கிழக்கு பகுதிகளுக்கு தாமிரபரணி குடிநீர் வழங்கப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம்? என உறுப்பினர் ஜெயக்குமார், பொன்னி, மதியழகன் ஆகியோர் கேள்வி எழுப்பினர். புதிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் 6 மாதங்களில் நிறைவடைந்து விடும். அதன் பிறகு, இப்பிரச்சனை சரி செய்யப்படும் என பொறியாளர் தெரிவித்தார்.