

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டத்தில் உள்ள மானூர் கிராமத்தில் , பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் , தாமரைக்கண்ணன் , மீனாட்சிசுந்தரம், ஸ்ரீதர் ஆகியோர் கள ஆய்வு செய்த போது அவ்வூர் கண்மாயில் குமிழித் தூனில் கல்வெட்டு இருந்ததை கண்டறிந்தனர்.
இக்கல்வெட்டு தொல்லியல் அறிஞர் திரு. சாந்தலிங்கம் அவர்களின் உதவியால் படிக்கப்பட்டது.இது பற்றி மேலும் அவர் கூறியதாவது ,
“நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றின் படி , நீரின் முக்கியத்துவம் பற்றி பாண்டிய மன்னர்கள் அறிந்திருந்தனர். காலங்களில் பெய்யும் மழை நீரை சேமிக்க கண்மாய் , ஏரி , போன்ற நீர் நிலைகள் உருவாக்கப்பட்டன. இது போல் அனைத்து கிராமங்களிலும் கண்மாய்கள் உருவாக்கப்பட்டது. வருடத்திற்கு ஒரு முறை கண்மாய் தூர் வாரவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த கல்வெட்டில் மானூரின் பழைய பெயர் காஞ்ஞையிருக்கை மானையூர் என்றும் , அவ்வூரை சேர்ந்த திருடையான் தேவபிரானான இராசகண்ட கோபாலர் என்பவர் கிழக்கோடிய வாய்க்கால் பகுதியை புதுப்பித்து தந்து , இதை தன்னுடைய தர்மமாக செய்தார். மேலும் அந்த பெருமடை இராசகண்டகோபால பெருமடை என்று இவரது பெயராலேயே வழங்கப்பட்டது. மேலும் தேவந்னாம் விக்கிரம பாண்டிய தச்சன் எழுத்து என்று கல்வெட்டை வெட்டியவரின் பெயரையும் சேர்த்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இக்கல்வெட்டு பராக்கிரம பாண்டியனின் காலத்தை சேர்ந்ததாகும். காலம் 13 ம் நூற்றாண்டு ஆகும். இவ்வாறு அவர் கூறினர்.
