உசிலம்பட்டி அருகே தொடர் மழையால் குடியிருப்பு பகுதி மற்றும் அரசு பள்ளி, ரேசன் கடையை மழைநீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் 600க்கும் அதிகமான குடியிருப்புகளுடன் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக பரவலான மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக இந்த நக்கலபட்டி கிராமத்தின் அருகே உள்ள தோட்டத்து பகுதியிலிருந்து வரும் மழை நீர் ஊருக்குள் புகுந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் அரசு பள்ளி, ரேசன் கடை பகுதிகளில் தேங்கி காணப்படுகிறது.
ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது, இதனால் தினசரி பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மழைநீரை அகற்றவும், மழை நீர் தேங்காத வண்ணம் நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.