• Thu. Apr 25th, 2024

காவல்துறை விளம்பரத்திற்கு பயன்படும் விஜய் திரைப்படங்கள்

கேரள மாநில அவசர உதவி எண் மக்களிடம் எளிதாகவும் விரைவாகவும் சென்றடைய மாநில காவல் துறை, தமிழ் நடிகர் விஜயின் படங்களை வைத்து புதுமையான முறையில் விளம்பரம் செய்துள்ளது.

பேருந்தில், ரயிலில், பயணிக்கும்போது அல்லது வீடு மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு எதிர்பாராதவிதமாக மருத்துவம், காவல் துறை சம்பந்தப்பட்ட உதவிகள் அவசரமாக தேவைப்படும். இந்தியாவில் தீயணைப்பு, பெண்கள் பாதுகாப்பு, காவல் துறை, ஆம்புலன்ஸ் என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, மத்திய அரசு 112 என்ற அவசர எண்ணை கொண்டு வந்துள்ளது.

நாடு முழுவதும் அவசர உதவிக்கு ஒரே எண்ணை (112) அழைக்கும் திட்டத்தின் கீழ், இந்தத் திட்டம் படிப்படியாக பல மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் கேரள மாநில அரசும் ஏற்கனவே இணைந்துள்ளது. இந்த நிலையில், 112 அவசர எண்ணை விளம்பரப்படுத்த கேரள மாநில காவல் துறை புது முயற்சியை மேற்கொண்டுள்ளது.

கேரள மாநில காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விஜய்யின் ‘போக்கிரி’ படத்தில் ரயிலில், நடிகை அசின் மற்றும் அவரது தம்பி ரவுடிகளிடம் மாட்டிக்கொள்ளும் சீனையும், அப்படி மாட்டிக்கொண்டால் ‘தெறி’ படத்தில் காவல் துறை உடையில் விஜய் மாஸாக வந்திறங்கும் காட்சியையும் வைத்து, “நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த எவரேனும் அவசரநிலையில் சிக்கிக்கொண்டால், 112-ஐ டயல் செய்யுங்கள், நாங்கள் உங்களுக்காக வந்து நிப்போம்!” என்று பதிவிட்டுள்ளது.

கேரளாவில் மலையாள முன்னணி நடிகர்களுக்கு இணையாக நடிகர் விஜய்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *