• Thu. Apr 25th, 2024

கர்நாடகத்தில் அதிமுகவினர், கேரளத்தில் திமுகவினர் ஜாலி டூர்

ஒசூர் மாநகராட்சியை கைப்பற்ற திமுக-அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பான்மை பலத்தை நிருபிக்க பெரும் முயற்சியில் இரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளதால் தங்களது மாமன்ற உறுப்பினர்கள் அதிமுகவினர் கர்நாடகா மாநிலத்திற்கும் திமுக மாமன்ற உறுப்பினர்களை கேரள மாநிலத்திற்கும் உரியமுறையில் கவனித்து சொகுசு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒசூர் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பிப். 22-இல் அறிவிக்கப்பட்டது. 45 வார்டுகளில் திமுக 21 வார்டுகளில் வெற்றி பெற்றது.

அதிமுக 16 வார்டுகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், பாஜக , பாமக, தலா ஒரு வார்டுகளிலும் சுயேட்சைகள் 5 பேர் வெற்றி பெற்றனர். பாமக சார்பில் வெற்றி பெற்ற காந்திமதிகண்ணன் வெற்றி பெற்ற கையோடு நேராகச் சென்று திமுகவில் இணைந்தார். இதனால் திமுகவின் பலம் 22 ஆக உயர்ந்தது.

அதனைத்தொடர்ந்து சுயேச்சைகள் 5 பேரும் திமுகவில் இணைந்தனர். இதனால் திமுகவின் பலம் 27 ஆனது. காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் என சேர்த்து 28 பேரும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை வியாழக்கிழமை நேரில் சென்று வாழ்த்து பெற்றனர். வாழ்த்து பெற்ற கையோடு ஒசூர் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் அவர்கள் கேரளாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் மார்ச் 2-ஆம் தேதி ஒசூர் திரும்புவார்கள் என தெரிகிறது. அதே நிலையில் 16 உறுப்பினர்களை கொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்களை அதிமுக கட்சியினர் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர் ஒருவர் உள்ளார். மேலும் சில எதிர்க்கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களை இழுத்து அதிமுகவினரும் ஒசூர் மாநகராட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேயர் பதவியை பிடிக்க 23 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

ஒசூரில் நடைபெற்ற தனியார் மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவில் கலந்துகொள்ள செவ்வாய்கிழமை ஒசூர் வந்த ஓ பன்னீர்செல்வம் ஒசூர் ஹில்ஸ் சொகுசு உணவகத்தில் கூடுதலாக ஒரு நாள் தங்கி ஒசூர் மாநகராட்சியை அதிமுக மாமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனைகளும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2006-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒசூர் நகராட்சியை கைப்பற்றும் போட்டியில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை கவனத்தில் கொண்டு தற்பொழுது இரு கட்சிகளும் தங்களது மாமன்ற உறுப்பினர்களை தனித்தனியாக அழைத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த 2006-ல் 30 உறுப்பினர்களை கொண்ட ஒசூர் நகரமன்ற தலைவர் தேர்தலில் அதிமுகவுக்கு 7 உறுப்பினர்களே இருந்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு 17 வாக்குகளை பெற்று அப்போது அதிமுகவில் இருந்த எஸ்.ஏ.சத்யா ஒசூர் நகரமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். திமுக கூட்டணிக்கு 23 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும் பாமக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் 14 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்த அனுபவத்தைக் கொண்டு இரு கட்சிகளும் தற்போது ஒசூர் மாநகராட்சி கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒசூர் மாநகராட்சி மேயர் தேர்தல்
முடியும் வரை ஒவ்வொரு நிமிடமும் திக் திக் என பதற்றம் நீடித்து வருகிறது. திமுகவில் இருக்கும் சில உறுப்பினர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோன்று அதிமுகவை சேர்ந்த பல உறுப்பினர்கள் திமுகவிற்கு வாக்களிக்கவும் வாய்ப்பு உள்ளதால் தேர்தல் முடியும் வரை பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் திமுகவிடம் இருபத்தி எட்டு மாமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ சத்யா மேயர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒசூர் மாநாட்சியில் துணை மேயர் பதவியை காங்கிரஸ் கட்சி கேட்பதால் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திராணி துணை மேயர் ஆகும் வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *