


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பின்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உடனிருந்தனர். இந்த நிலையில், ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்தது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து இன்று மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் தவெக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

