கட்சிகளுக்கும், மக்களுக்கும் பாடம் சொல்லும் திரைப்படம் என்று, ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்திற்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பாராட்டு தெரிவித்து இருந்த நிலையில், மருத்துவர் இராமதாஸ்-க்கு நடிகர் விஜய் ஆன்டனி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், இந்திய அரசியல் மூத்த தலைவர்களில் ஒருவருமான மருத்துவர் ராமதாஸ், தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளில் வெளியாகும் சிறந்த திரைப்படங்கள் அனைத்தையும் பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டு வந்துள்ளார்.
அதன்படி, நடிகர் விஜய் அந்தோணி நடிப்பில் வெளியாகிய ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தை அண்மையில் பார்த்த மருத்துவர் ராமதாஸ், தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்த அவரின் அந்த முகநூல் பதிவில்,
“கொரோனா வைரஸ் பரவல் காலம் என்னை வீட்டுக்குள் முடக்கிப் போட்டிருப்பது குறித்தும், அதனால் பாட்டாளிகளை சந்திக்க முடியாமல் வாடிக் கொண்டிருப்பது குறித்தும் பலமுறை எழுதியிருக்கிறேன். இடையிடையே சமூகத்திற்கு நல்ல கருத்துகளைக் கூறும் திரைப்படங்களையும் பார்த்தேன். பணிகள் காரணமாக, திரைப்படங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்க முடியாது. ஒரு படம் பார்த்து முடிக்க 2 அல்லது 3 நாட்களாகி விடும். அந்த வரிசையில் கடந்த 3 நாட்களாக நான் பார்த்த திரைப்படம் ‘கோடியில் ஒருவன்’.
மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்…. யாருக்கு வாக்களிக்கக் கூடாது! என்பதை விளக்கும் திரைப்படம் தான் கோடியில் ஒருவன். இந்தத் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இதனை அறிந்த நடிகர் விஜய் அந்தோணி, தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவர் இராமதாஸ்-க்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு இது மிக்க மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் நடிகர் விஜய் ஆன்டனி தனது ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

