சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய- மாநில அரசுகளின் பங்கீட்டில் 32.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 தளங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தாய் சேய் நலப் பிரிவு புதிதாகக் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிட வளாகத்தில் சென்னை, கோவை பெருநகரங்களுக்கு அடுத்தபடியாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன மிகை அழுத்த ஆக்சிஜன் (Hyperbaric Oxygen Therapy – HBOT) சிகிச்சை துவங்கப்பட்டுள்ளது.

சிவகாசி பகுதியில் தொடர் வெடி விபத்துக்களில் தொழிலாளர்கள் தீக்காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே தீக்காயமடையும் பட்டாசு தொழிலாளர்களுக்கு தீக்காயம் உரைவில் குணமடைந்து அவர்களது உயிரை காக்கும் வகையில் தமிழக சுகாதார துறை சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக தென் மாவட்டங்களில் முதன் முறையாக சிவகாசி அரசு மருத்துவமனையில் இந்த உயர்தர சிகிச்சையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த இயந்திரம் மூலமாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு
தீக்காயங்கள் விரைவில் குணமடையவும், புதிய திசுக்கள் வளரவும், இரத்த ஓட்டம் சீராகவும் உதவுவதாகவும், பட்டாசு தொழிற்சாலை விபத்து உள்ளிட்ட விபத்துகளின் மூலமாக தீக்காயமடைபவர்களின் புண் மற்றும் சர்க்கரை நோயினால் நீண்ட நாட்களாக ஆறாத புண்களால் பாதிக்கப்படுவோருக்கு இந்த இயந்திரம் மூலமாக சிகிச்சையளிக்கப்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்குமென தெரிவித்துள்ள சுகாதாரத் துறையினர், தீக்காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் காலங்களில் தினமும் சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த இயந்திரம் மூலமாக சிகிச்சையளிக்கப்படும் போது தீக்காயம் விரைவில் ஆறி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும் 40 முதல் 50 சதவீதம் வரை தீக்காயமடைந்த தொழிலாளர்களுக்கு மிகை அழுத்த ஆக்ஸிஜன் சிகிச்சை மூலம் சிகிச்சையளித்தால் காயம் முழுவதும் சரி செய்யப்படுவதோடு, ஆறாத புண்களிலிருந்து நோயாளிகள் மீள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவிக்கின்றனர்.





