புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். முதுகுளத்தூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வரை ஹெலிகாப்டரில் வந்த அவர் அறந்தாங்கி வேட்பாளர் கவிதா ஸ்ரீகாந்த் அவர்களை ஆதரித்து அறந்தாங்கியில் வாக்குகள் சேகரித்தார்.
அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இராமச்சந்திரன் அவர்களை ஆதரித்து புதுக்கோட்டை திலகர் திடலில் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவருடன் பரப்புரை வாகனத்தில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில் புதுக்கோட்டை திலகர் தியேட்டரில் எள் போட்டால் எண்ணையாக வந்துவிடும் என்ற அளவிற்கு கூட்டம் கூடி இருக்கிறது. ராமச்சந்திரன் வெற்றி பெற்றுவிட்டார் என்று தோன்றுகிறது. இங்கு புதுக்கோட்டைக்கு என்று எந்த திட்டத்தையும் கொண்டு வராத எம்எல்ஏ முத்துராஜா. வசூல்ராஜா முத்துராஜா. எந்தத் திட்டத்தையும் கொண்டு வராத, எதையும் செய்யாத இரண்டு அமைச்சர்கள். அந்த இரண்டு அமைச்சர்களாலும் எந்த பயனும் கிடையாது. புதுக்கோட்டைக்கு அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பல் மருத்துவக் கல்லூரி, துணைக்கோள் நகரம், ராணியார் ஆஸ்பத்திரி, பூங்கா, காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் என அனைத்தையும் கொண்டு வந்தது அதிமுக அரசு.

அதிமுக பாஜக கூட்டணியில் ஓர் எளிய இனிய இனிய வேட்பாளர் ராமச்சந்திரனை நிறுத்தி இருக்கிறது அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இங்கிருக்கும் இளைஞர்கள் அனைவரையும் ஈர்த்திருக்கும் அண்ணாமலை அவர்கள் இளைஞர்களின் மாபெரும் சக்தியாக இங்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறார்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வந்தது. ஆனால் இப்போது 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிதண்ணீர் வருகிறது. புதுக்கோட்டை மக்களுக்கு குடிதண்ணீர் கூட வழங்க முடியாத இரண்டு அமைச்சர்கள் ஒரு எம்எல்ஏ தேவையில்லை.
இன்னும் 20 நாள் பொறுத்திருங்கள். புதுக்கோட்டைக்கு எடப்பாடியார் அவர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசின் உதவியுடன் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித் தருவார். அதற்கு தம்பி ராமச்சந்திரன் துணை நிற்பார். நாம் கொண்டு வந்த திட்டங்கள் எதுவும் இப்போது சரியாக நடைபெறவில்லை. நாடு கஞ்சா போதையில் தள்ளாடுகிறது. நான் புள்ளி தான் வைத்திருக்கிறேன். அண்ணன் அண்ணாமலை நன்றாக கோலம் போடுவார் என்று அவரைப் பேச அழைத்தார்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில் இன்று வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியாக இல்லாமல் வெற்றி விழா நிகழ்ச்சியாக இருப்பதைப் போல் எல்லோரும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சிக்கு முடிவு வந்திருக்கிறது. 168 இடங்களில் நமது கூட்டணி கட்சியான அதிமுகவும் 33 இடங்களில் பாஜக போட்டியிடுகிறது. அனைத்தும் வெற்றி பெற்று விட்டது. நமது இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் விராலிமலையில் அண்ணன் விஜயபாஸ்கர் வெற்றி பெற்று மீண்டும் அமைச்சராக இங்கு வர வேண்டும்.
தமிழகத்தின் தாய்மார்களின் கவலையெல்லாம் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் பாதுகாப்பாக திரும்ப வர வேண்டுமே என்ற கவலையாக தான் இருக்கிறது. மே 4 க்குப் பிறகு இந்த கவலையெல்லாம் நீங்கள் விட்டுவிட வேண்டும். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு கட்டுக்கடக்கிறது.
முதலமைச்சர் இடம் கேட்டால் நன்றாக இருக்கிறது என்று சொல்வார். தமிழகத்தில் வெறும் கற்பழிப்பு வழக்குகள் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2080 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. படுகொலைகள் 8008 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இங்கு நம்மை நம்பி பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி வந்திருக்கிறார்கள். தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பிஞ்சுக் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் 39 ஆயிரத்துத் 900வழக்குகள். இதுபோன்ற கேடுகெட்ட ஆட்சியை எந்த ஒரு ஐந்தாண்டு காலத்திலும் நாம் பார்த்ததில்லை. நாம் தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினரை மட்டும் தான் தேர்ந்தெடுக்க முடியும். அதற்குப் பிறகுதான் முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க முடியும். புதுக்கோட்டையில் இருந்து ராமச்சந்திரனை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். இங்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக போராடியவர்கள் இருக்கிறார்கள். மோடி அவர்கள் உதவியோடு இன்றைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்குப் பெரும் முயற்சி எடுத்தவர் இங்கிருக்கும் விஜயபாஸ்கர். அது வெறும் அரசு ஆணையுடன் நின்று விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றங்களிலும் படியேறி இருக்கிறார் விஜயபாஸ்கர்.
ஆனால் இங்கிருக்கும் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா தனியார் மருத்துவ மனையை நடத்தி வருகிறார். மோடி அவர்கள் இங்கு 11 மருத்துவ கல்லூரியை கொண்டு வருவதற்கு முன்பாகவே அண்ணன் விஜயபாஸ்கர் இங்கு மூன்று மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வந்தார். புதுக்கோட்டைக்கு ஒன்று, ஓமந்தூருக்கொன்று கரூருக்கு ஒன்று. இந்த தொகுதியின் எம்எல்ஏ முத்துராஜா உங்களது தனியார் மருத்துவமனைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மருத்துவக் கல்லூரிக்குக் கொடுப்பதில்லை. தமிழ்நாட்டில் இரண்டு பல் மருத்துவக் கல்லூரிகள் தான் இருக்கின்றன. அதில் ஒன்று புதுக்கோட்டை. அதையும் விஜயபாஸ்கர் தான் கொண்டு வந்தார். அதை எம்எல்ஏ முத்துராஜா கவனிப்பதே கிடையாது.
அதிமுக அரசு கொண்டு வந்த காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் இன்றைக்கு ஒவ்வொரு குடும்பமும் மாதம் ஒன்றுக்கு 3000 ரூபாய் குடிதண்ணீருக்காகச் செலவு செய்கிறது. ஆண்டொன்றுக்கு 36 ஆயிரம் ரூபாயும் இந்த ஐந்து ஆண்டுகளில் குடிதண்ணிற்காக மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும் நீங்கள் செலவு செய்திருக்கிறீர்கள். இந்த நாள் இனிய நாள். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இன்று மோடி ஐயா கொண்டு வந்திருக்கிறார். 17 ஆம் தேதி மாலை இந்தியாவின் சரித்திரத்தை வேறு மாதிரி எழுத இருக்கிறோம். தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொம்மையாகச் செயல்படுகிறார். அவருக்கு ஒரு நாளுக்கு மூன்று முறை கீ கொடுக்க வேண்டும். மூன்று முறையும் வெவ்வேறு விதமாகப் பேசுவார்.
புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதி வேண்டும் என்று நான் ஏற்கனவே கடிதம் எழுதினேன். அடுத்த மறு சீரமைப்பில் பழையபடி புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி வரும் என்று சொன்னார்கள். கடிதம் எழுதிய எனக்குப் பதில் வந்திருக்கிறது.
அருமைச் சொந்தங்களே. இன்றைக்கு உங்களுக்கு டபுள் போனஸ். தொகுதி பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்பதோடு இந்திய நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்கள் 540 இல் இருந்து 850 ஆக உயர்கிறது.
அந்த வகையில் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்கள் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பது ஐயா நரேந்திர மோடியின் எண்ணம்.
தமிழ்நாடு 39 லிருந்து 59 தொகுதியாக மாறுகிறது. கேரளா 20 லிருந்து 30. தெலங்கானா 17 இல் இருந்து 26. ஆந்திரா 25லிருந்து 31. கர்நாடகா 28 இலிருந்து 42. எல்லோருக்கும் 50 சதவீதம். உத்திரபிரதேசத்துக்கும் 50 சதவீதம் தமிழ்நாட்டுக்கும் 50 சதவீதம். எல்லோருக்கும் சமமாகத்தான் கொண்டு வந்திருக்கிறோம். தென்னிந்தியாவில் இருக்கும் மாநிலங்களிலும் 25.9 % 50% மாறும். அதனால் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு டபுள் போனஸ். தொகுதியும் தனியாக கிடைக்கிறது 33 சதவீதமும் கிடைக்கிறது என்று பேசினார்.



