


சிறுபான்மையினர் மக்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் விக்டோரியா கவுரி பேசிய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனால் அவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கும் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
விக்டோரியா பா.ஜ.க-வின் ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக கொண்டவர், அவரை அரசியல் சாசனத்தில் அதிகாரமிக்க நீதிபதி பதவியில் அமரவைக்கக்கூடாது என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இதை அவசர வழக்காக கருதி உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என மனு தாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நேற்று காலை விக்டோரியா கவுரிக்கு எதிரான மனு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், விக்டோரியா கவுரிக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர். அதையடுத்து நேற்று காலை திட்டமிட்டபிடி விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில்.சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் விக்டோரியா கவுரி ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் ஒன்று இன்று முதல் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

