• Fri. Mar 29th, 2024

வருஷநாடு விவசாயிகள் வனத்துறையினரை கண்டித்து போராட்டம்!

அரசரடி, வெள்ளிமலை, ராஜீவ் நகர், இந்திரா நகர் ,பொம்முராஜபுரம் உள்ளிட்ட கிராமங்கள் மேகமலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலை கிராமங்களில் இலவம் பஞ்சு, ஏலக்காய், முருங்கை பீன்ஸ் உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாயிகளை வெளியேற்றுவதற்கு வனத்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதற்கட்டமாக விவசாய நிலங்களில் உழவு செய்தல், புதிய மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரிப்பு பணிகள் செய்ய வனத்துறை தடை விதித்துள்ளது. மலைக் கிராம விவசாயிகள் சார்பில் வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்கக் கோரி பல்வேறு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை.

தற்போது இலவம் பஞ்சு சீசன் துவங்கியுள்ளதால் அதனை பதம் பிரிக்க கோரையூத்து, அரண்மனைப்புதூர் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் அரசரடிக்கு செல்லக்கூடிய அரசு பேருந்தில் கூலி வேலைக்கு சென்றனர். அப்போது மஞ்சனூத்து செக் போஸ்டில் இருந்த வனத்துறையினர் கூலி வேலைக்கு யாரும் செல்லக்கூடாது என்று பஸ்சை நிறுத்தி சம்பந்தப்பட்ட பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து கோரையூத்து, அரசரடி சேர்ந்த விவசாயிகள் வனத்துறையை கண்டித்து மஞ்சனூத்து செக்போஸ்ட் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி டி.எஸ்.பி., தங்க கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் குமரேசன், மேகமலை ரேஞ்சர் சதீஷ் கண்ணன், வருஷநாடு ரேஞ்சர் ஆறுமுகம் , ஊராட்சி மன்ற தலைவர் பால் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன், சார்பு ஆய்வாளர்கள் ராமசாமி, அருண்பாண்டியன், ஊராட்சி செயலாளர் ராமசாமி, எஸ்.பி. தனிப்பிரிவு போலீசார் பாண்டியராஜன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வரக்கூடிய காலங்களில் விளைபொருள் எடுப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் சார்பில் இடையூறு இருக்காது என்று தெரிவிக்கப்பட்ட பின்னரே விவசாயிகள் கலைந்து சென்றனர்.

விவசாயிகள் கூறுகையில், அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த மூன்று தலைமுறையாக குடியிருந்தும், இலவம்பஞ்சு, ஏலக்காய், பீன்ஸ் உள்ளிட்ட விவசாயம் செய்து அதில் வரக்கூடிய வருவாயை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். கடந்த சில மாதங்களாகவே வனத்துறையினர் தொடர்ந்து எங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தற்போது இலவம்பஞ்சு சீசன் துவங்கியுள்ளதால் அதனை பதம் பிரிக்க விடாமல் வனத்துறையினர் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கின்றனர் என்று குற்றம் சாட்டினர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *