மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொசவ பட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கே உள்ள மூன்று தெருக்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மழைக்காலங்களில் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் வீடுகளுக்குள் கழிவு நீர் செல்வதால் பாம்பு பல்லி தேள்
போன்ற விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வருவதாகவும் ஆகையால் அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுமார் 10 லட்சம் மதிப்பில் செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் மூலம் முதலைக்குளம் ஊராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது மூன்று தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய் பாதி கட்டிய நிலையில் சில தனி நபர்கள் எதிர்ப்பு காரணமாக கழிவுநீர் தாழ்வாய் கட்டும் பணியை பாதியிலேயே அதிகாரிகள் நிறுத்தி இருந்தனர். இதனால் பொது மக்களின் வீடுகளுக்கு முன்பு கால்வாயில் தேங்கிய கழிவு நீரால் கடுமையான சுகாதார கேடு ஏற்பட்டது.

மேலும் கழிவுநீர் கால்வாய் பாதி கட்டப்பட்ட நிலையில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலைக்கு சென்றது. இதன் காரணமாக பள்ளி குழந்தைகளுக்கு சமையல் செய்யும்போது கழிவுநீர் காரணமாக குழந்தைகளின் உணவு விஷமாக மாறும் நிலைக்கு சென்றது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கிராமத்தினர் ஒன்று சேர்ந்து செல்லம்பட்டி ஒன்றிய ஆணையாளரிடம் உடனடியாக பாதியில் விட்டுச் சென்ற கழிவுநீர் கால்வாயை கட்டி முடிக்க வேண்டும் என கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.

ஆனால் ஏற்கனவே ஆட்சேபனை தெரிவித்திருந்த தனிநபர்கள் தங்கள் இடத்திற்குள் கழிவுநீர் வரக்கூடாது என கூறி மீண்டும் ஆட்சேபனை தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட இடம் தங்களுடைய பட்டா இடம் எனக் கூறி வருவாய் துறை மூலம் அளவீடு செய்யும் பணியை தொடங்கினார்கள். இந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் கட்டும் இடத்தில் அளவீடு செய்ய வந்த வருவாய்த்துறை மற்றும் செல்லம்பட்டி யூனியன் அதிகாரிகள் முதலைக்குளம் ஊராட்சி செயலாளர் ஆகியோர் அளவீடு செய்யும் பணியை தொடங்கினார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய பணி மாலை 4 மணி வரை நடைபெற்ற நிலையில் பொறுமை இழந்த பொதுமக்கள் கழிவுநீர் கால்வாயை கட்டுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் பஸ் மறியலில் ஈடுபட போவதாக கூறி உசிலம்பட்டியில் இருந்து விக்கிரமங்கலம் மற்றும் சோழவந்தான் சென்ற அரசு பேருந்தை மறித்தனர்.
இதனால் அளவீடு செய்யும் பணிக்கு பாதுகாப்புக்காக வந்திருந்த விக்கிரமங்கலம் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். ஆனால் உடனடியாக கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும் இல்லையென்றால் செல்லம்பட்டி யூனியன் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் மதுரை தேனி நெடுஞ்சாலையில் பஸ் மறியலில் ஈடுபடுவோம் என காவல்துறையிடம் கூறி தொடர்ந்து பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் இன்ஸ்பெக்டர் மறியல் செய்வதற்கு அனுமதி இல்லை உடனடியாக கலைந்து செல்ல வேண்டும் இது குறித்து திங்கட்கிழமை பேசி முடிவு செய்து கொள்ளலாம் அளவீடு மணி திங்கட்கிழமை முடிந்துவிடும் அதன் பிறகு கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கான நடவடிக்கைகளை செல்லம்பட்டி யூனியன் அலுவலகத்தில் சென்று பேசிக் கொள்ளுங்கள் என கூறிய நிலையில் அளவீடும் பணி 60% முடிந்த நிலையில் தற்காலிகமாக மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கக்கூடிய கொசவபட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் செல்ல வழி இல்லாமல் பள்ளி செல்லும் குழந்தைகள் வயதானவர்கள் பெண்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் அதிகாரிகளின் தொடர் அலட்சியப் போக்கு காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி பாதியில் நிறுத்தப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். கழிவுநீர் கால்வாய் கிராமத்திற்குள் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தங்கள் பகுதிக்கு வந்து தேங்கியுள்ள கழிவு நீர் கால்வாய் பகுதிகளை பார்வையிட்டு தங்களின் சிரமங்களை போக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்




