• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கோவையில் இயக்குநர், நடிகர் பாக்யராஜுக்கு நினைவு அஞ்சலியில் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு,நடிகர்கள் பங்கேற்பு –

BySeenu

Jul 12, 2026

கோவையில் மறைந்த இயக்குநரும், நடிகருமான பாக்யராஜுக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாக்கிராஜ் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, நடிகர்கள் சிவகுமார், சுந்தர்ராஜன்,கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அவரது நண்பர்கள், உறவினர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில், பாக்யராஜின் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி கால நண்பர்கள் கலந்து கொண்டு அவருடன் பழகிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜன் பேசுகையில், “பாக்யராஜுக்கு சென்னையில் அரசு மரியாதையுடன் அஞ்சலி நடைபெற்றது. அவரை கோவைக்கு அழைத்து வர முடியவில்லை. எவ்வளவு பேச வேண்டும் என்று நினைத்தாலும், தற்போது என்னால் பேச முடியவில்லை” என்றார்.

நடிகர் சிவக்குமார் பேசியதாவது:
“கடந்த ஜனவரி 7-ம் தேதி திரையுலகில் பாக்யராஜின் 50 ஆண்டுகால சாதனை விழா நடைபெற்றது. அதற்கு அடுத்த 6 மாதத்தில் இப்படியொரு நிகழ்வு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இறைவன் கொடூரமானவன்..பாக்யராஜ் நடித்தும் இயக்கியும் உருவாக்கிய 25 படங்கள் எப்போதும் பேசப்படும். கொங்கு மண்ணுக்கும் சினிமாவுக்கும் நீண்ட தொடர்பு உள்ளது. 1930-களிலேயே ‘சந்திரகாந்தா’ போன்ற படங்கள் கோவையில் எடுக்கப்பட்டுள்ளன.

எம்.ஜி.ஆரின் ‘ராஜகுமாரி’, சிவாஜி கணேசனின் ‘மனோகரா’, ‘தங்கப்பதக்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் கோவையில் உருவாகியுள்ளன. எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்த படங்களில் ‘மலைக்கள்ளன்’ முக்கியமானது.
மணிவண்ணன், ஆர். சுந்தர்ராஜன், பாக்யராஜ் ஆகியோர் தங்களது கதைகளுக்கு தாங்களே திரைக்கதை, வசனம் எழுதி நடித்தவர்கள். பாக்யராஜின் படங்கள் அனைத்தும் ரத்தினங்கள்.
‘பயணங்கள் முடிவதில்லை’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’ போன்ற வெள்ளி விழா படங்களை சுந்தரராஜன் கொடுத்துள்ளார், அதேபோன்று, ‘அந்த 7 நாட்கள்’ போன்ற சிறந்த படைப்புகளையும், ‘முந்தானை முடிச்சு’ உள்ளிட்ட அவரது படங்கள் காலத்தால் அழியாதவை. ‘டார்லிங் டார்லிங்’ படத்தை இரண்டு முறை பார்த்துள்ளேன். பாக்யராஜின் 25 படங்களும் சிறந்த படைப்புகள். அவருக்கு வாழ்க்கை துணையாக பூர்ணிமா இருப்பது அவரது பாக்கியம்” என்றார்.

நடிகர் சாந்தனு பேசுகையில்,
“எனது சொந்த ஊர் என்பதால் அப்பாவுக்காக பேச வந்துள்ளேன். அப்பா அடிக்கடி சொல்லுவார் சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் என்பது அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவது. அப்பாவின் மறைவுக்கு இன்று வரை ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்பாவை நடிகராக, இயக்கனூராக பார்த்து வளர்ந்து உள்ளேன். இன்று அப்பா மறைந்த பிறகு வாழ்க்கையில் பல பாடங்களை கற்றுக் கொண்டுள்ளேன்” என்றார். நிகழ்ச்சியில் பாக்யராஜின் குடும்பத்தினர், திரையுலகினர், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.