
டூவீலர் திருட்டில் பிடிபட்ட போதை ‘கிராக்கி’ வாலிபரிடம் விசாரணை என்ற பெயரில் நையாண்டித் தனமாக இருந்த அவரின் வாக்கு மூலத்தை வீடியோ பதிவு செய்து, அதை சமூக வலைதளங்களில் பரவ காரணமாக இருந்த பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷன் பெண் ஆய்வாளர் மதனகலா, தென்மண்டல ஐ.ஜி., அன்பு உத்தரவின் பேரில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வாளராக பணிபுரிந்தவர், மதனகலா. கடந்த 19ம் தேதி, பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘பல்சர்’ பைக்கை திருட முயன்ற வாலிபரை அக்கம் பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். ஆஹா… திருட்டு வழக்கில் ஒருத்தன் வசமா சிக்கிட்டான்யா…என
பெருமிதமடைந்த ஆய்வாளர், பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை செய்தார். வாக்கு மூலம் என்ற பெயரில் அவரின் நையாண்டித் தனமான பேச்சை அலைபேசி மூலமாக வீடியோ பதிவு செய்தார். அவரின் ”நான் ஸ்டாப்’ பேச்சை கேட்டு, ஆய்வாளர் குபீர் சிரிப்பில் ஈடுபட்டதும் வீடியோ பதில் தெள்ளத் தெளிவாக கேட்டது. அதன் பிறகு தான் விதி விளையாட துவங்கியது. இந்த வீடியோ பதிவு எப்படியோ சமூக வலைதளங்களில் கசிய துவங்கியதையடுத்து, ஒரு பொறுப்புள்ள போலீஸ் அதிகாரி இப்படியா? நடந்து கொள்வது என விமர்சனங்கள் காத்து வாக்க பரவ துவங்கியது. இந்த விவகாரம் கடைசியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே – வரை சென்றது. இதனால் ஆத்திரமுற்ற அவர் ஆய்வாளர் மதனகலாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்கு முன், தென்மண்டல ஐ.ஜி., அன்பு அதிரடி உத்தரவில் ஆய்வாளர் மதனகலா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். விளையாட்டு… வினையானது… என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு என கூறலாம்.