• Fri. Mar 29th, 2024

அறிமுக தமிழ்நாயகியை அலைபேசியில் அழைத்து பாராட்டிய வைரமுத்து

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் ஐம்பது அறிமுக கதாநாயகிகளாவது வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இதில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்த படிகளில் ஏறி செல்பவர்கள் மிகவும் குறைவே..

ஆனால் ஒருசில நடிகைகள் மட்டும் ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் ஆகி சட்டென புகழ் வெளிச்சத்திற்குள் வந்து விடுவார்கள்.. அப்படிப்பட்டவர்களில் ஒருவராகதான் அறிமுக நடிகையாக இருக்கிறார் தமிழகத்தை சேர்ந்த தீப்ஷிகா.

தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் திரையுலகில் நுழைவதே அரிது, அப்படியே நுழைந்தாலும் அவர்களுக்கு இங்கே பெரிய வரவேற்பில்லை என்கிற நிலையே தொடர்கிறது இவற்றை பொய்யாக்கி கடந்த ஒரு வருடத்திற்குள் தமிழில் மூன்று, தெலுங்கில் மூன்று என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் நடிகை தீப்ஷிகா. கவிஞர் வைரமுத்துவே போனில் அழைத்து பாரட்டும் அளவுக்கு ஒரு பரபரப்பு வட்டத்திற்குள்ளும் வந்துள்ளார்.

சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்த தீப்ஷிகா
தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மாயா, மாநகரம் உள்ளிட்ட படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்கிறார் தீப்ஷிகா..


தமிழில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே தெலுங்கில் பிரபல நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தீப்ஷிகா, அந்தப்படத்திற்கான வெளிநாட்டு படிப்பிடிப்பில் நடித்துவிட்டு, தற்போது ஹைதராபாத்தில் நடக்கும் ஷெட்யூலில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இது காதல் கலந்த உணர்வுப்பூர்வமான படமாக உருவாகிறது. இதுதவிர தெலுங்கு ஹீரோ நவீன் சந்திராவுடன் ஒரு படத்தில் நடித்து முடித்தும் விட்டார். கைவசம் இன்னொரு தெலுங்கு படமும் வைத்துள்ளார்.

படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் வந்தது தான் கவிஞர் வைரமுத்துவின் கனவு காவியமான ‘நாட்படு தேறல்’ என்கிற ஆல்பத்தில் நடிக்கும் வாய்ப்பு. இலக்கியத்தில் ஒரு புதிய முயற்சியாக நூறு பாடல்களை கொண்டு அவர் உருவாக்கி வரும் நாட்படு தேறல் என்கிற ஆல்பத்தில் இடம்பெறும் பாடல்கள் ஒவ்வொன்றையும் முன்னணி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். அந்தவகையில் இந்த ஆல்பத்தில் இடம்பெறும் கேசாதிபாதம் என்கிற பாடலில் நடன ஆசிரியையாக நடித்துள்ளார் தீப்ஷிகா. ஒரு பெண்ணின் தலைமுதல் பாதம் வரை அவளது அவயங்களை ஒவ்வொன்றாக இயற்கையுடன் ஒப்பிட்டு வர்ணித்து இந்த பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து. இந்தப்பாடலை விஜய் நடித்த பைரவா படத்தை இயக்கிய இயக்குனர் பரதன் இயக்கியுள்ளார். இந்தப்பாடலுக்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து, கிட்டத்தட்ட அதை மறந்தே போயிருந்த சூழலில், திடீரென ஒருநாள் கவிஞர் வைரமுத்துவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தபோது முதலில் தீப்ஷிகாவால் அதை நம்ப முடியவில்லை எனக் கூறும் தீப்ஷிகா

மாநாடு படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த சமயத்தில் புதிய நம்பரில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.. நான் வைரமுத்து பேசுகிறேன் என அவர் பேசியபோது, கூட்டத்தில் இருந்த எனக்கு குழப்பம் ஒருபக்கம், பிரமிப்பு என ஸ்தம்பித்து போனேன்.. ஒருவேளை யாராவது கலாட்டா செய்கிறார்களோ என்று கூட தோன்றியது..ஆனால் அதன்பின் பேசுவது கவிப்பேரரசர் தான் என உணர்ந்ததும் எனக்கு பேச்சே வரவில்லை.. கேசாதிபாதம் பாடலில் நடித்துள்ள நான் அந்தப்பாடலுக்கே உயிர்கொடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக பாராட்டிய வைரமுத்து சார், தமிழ்சினிமாவில் உனக்கு நல்லதொரு இடம் காத்திருக்கிறது என வாழ்த்தினார்.. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான், அவராகவே அழைத்து வாழ்த்தும் அளவுக்கு எனது வேலையை சிறப்பாக செய்திருக்கிறேன் என்கிற மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்பட்டது” என சிலாகித்து கூறுகிறார் தீப்ஷிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *