தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள தாழையூத்து ஆத்தடி கருப்பசாமி கோவில் 18 ஆம் பெருக்கு திருவிழா விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலையில் வைகை ஆற்றில் இருந்து மஞ்சள் நீர் குடம் எடுத்து வந்து மூலவர் கருப்பசாமிக்கும் மற்றும் கன்னிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .
இதனையடுத்து பொங்கல் வைத்து கருப்பசாமிக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் படையல்கள் வைக்கப்பட்டது .இதனைத் தொடர்ந்து பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும் ,கெடா வெட்டியும் ,சேவல் அறுத்தும் பக்தர்களுக்கு உணவு விருந்தளித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர் .இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் வைகை ஆற்றுப் பாசனம் மூலம் விவசாயம் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குலதெய்வமான கருப்புசாமிக்கு ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று படையல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவது நன்றி கடனாக உள்ளது .அதேபோல் இந்த ஆண்டும் நேற்று ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர்.