• Thu. Apr 18th, 2024

நிரம்பியது வைகை அணை.., உபரிநீர் திறப்பு!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே ஆற்றின் வழியாக திறக்கப்பட்டது .வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து 71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் மள மள என உயர்ந்து 70 அடியை எட்டியது இதனை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் அணையின் மேல் மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து வைத்தனர். தற்போது அணைக்கு வினாடிக்கு 1190 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது .ஏற்கனவே மதுரை, ஆண்டிபட்டி சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டங்கள், தேனி அல்லிநகரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு வினாடிக்கு 69 கன அடி நீர் வீதம் திறக்கப்பட்டு வந்தது.

வைகை ஆற்றில் இப்பொழுது கூடுதல் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் ,ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர் .வைகை ஆறு இந்த வருடம் இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது .ஏற்கனவே ஜனவரி மாதம் தனது முழு கொள்ளளவை எட்டியது. மேலும் தேனி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்டத்திலுள்ள சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை ஆகியவையும் முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது .அதே சமயம் மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி, சின்ன சுருளி அருவி ,கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *