• Fri. Mar 29th, 2024

பிரதமருடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர் ஆலோசனை..!

Byவிஷா

Nov 13, 2021

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்றக் குழுவுடன் விவாதித்தார்.

அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜான் கார்னின் தலைமையிலான அமெரிக்க நாடாளுமன்றக் குழு இந்தியாவிற்கு அரசு பயணமாக வந்துள்ளது. இந்தக் குழுவில் செனட் சபை உறுப்பினர்கள் மைக்கேல் கிராப்போ, தாமஸ் டியுபர் வில்லே, மைக்கேல் லீ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டோனி கன்சாலேஸ், ஜான் கெவின் எலிசி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு இன்று பிரதமர் மோடியை சந்தித்தது. அப்போது மிகப்பெரிய சவால்களுக்கு இடையே கொரோனாவை இந்தியா சிறப்பாக சமாளித்தது என பாராட்டினர்.


ஜனநாயக மாண்புகளை பகிர்ந்து கொள்வதன் வாயிலாக இந்தியா – அமெரிக்கா ஒருங்கிணைந்த உலகப் பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதிலும், அமெரிக்க நாடாளுமன்றம் ஆக்கப்பூர்வமாக பங்காற்றியதுடன் தொடர்ந்து ஆதரவை அளித்து வருவது குறித்து பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது தெற்காசியா மற்றும் இந்தோ பசிபிக் பிராந்தியம் தொடர்பான விவாதம் நடைபெற்றது.


உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், முக்கிய தொழில்நுட்பங்களுக்கான நம்பகமான விநியோகச் சங்கிலிகள் போன்ற சமகால உலக விஷயங்கள் குறித்து பிரதமர் தமது கருத்தை பகிர்ந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *