• Fri. Mar 29th, 2024

ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்க அமெரிக்கா நடவடிக்கை

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

முன்னாள் அதிபர் டிரம்ப் தனது பதவிக் காலத்தில் 2018-ம் ஆண்டு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றினார். அத்துடன் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அணுசக்தி ஒப்பந்தத்தின் சில முக்கிய நிபந்தனைகளை ஈரானும் புறக்கணித்தது.

இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆனால் தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கினால் மட்டுமே பிரச்சனை முழுமையாக முடிவுக்கு வரும் என ஈரான் கூறி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

ஈரானில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் முந்தைய டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட சில பொருளாதாரத் தடைகளை ஜோ பைடன் நிர்வாகம் தற்போது ரத்து செய்துள்ளது.
இது அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஒரு முக்கிய நடவடிக்கையாக இது அமையும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கியதை வரவேற்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும் ஈரான் கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *