• Thu. Apr 24th, 2025

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரிப்பு: அமெரிக்க ஆணையம் குற்றச்சாட்டு!

ByP.Kavitha Kumar

Mar 27, 2025

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பாகுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் மத சுதந்திர நிலைமைகள் தொடர்ந்து மோசமடைந்து வருவதாக சர்வதேச மத சுதந்திரற்கான அமெரிக்கா ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, “இந்திய நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது” எனப் பேசினார்.

இந்த பேச்சு இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரசாரத்தில் பாஜக வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், தான், இந்தியாவில் சிறுபான்மையினரை நடத்தும் விதம் மோசமடைந்து வருவதாகவும், சீக்கிய பிரிவினைவாதிகளைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியாவின் உளவு அமைப்பின் மீது தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 2024-ம் ஆண்டிலிருந்து சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பாகுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் மத சுதந்திர நிலைமைகள் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது” என அமெரிக்க அமைப்பு தெரிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தில் பாஜக ஈடுபட்டதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கையை இந்தியா நிராகரித்ததுடன், இது ஒரு சார்புடைய மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனிப்பட்ட சம்பவங்களைத் தவறாக சித்தரித்து, இந்தியாவின் துடிப்பான பன்முக கலாச்சார சமூகத்தின் மீது அவநம்பிக்கைகளை ஏற்படுத்த சர்வதேச மத சுதந்திரற்கான அமெரிக்கா ஆணையம் (USCIRF) தொடர்ந்து முயற்சிப்பது, மத சுதந்திரத்திற்கான உண்மையான அக்கறையை விட திட்டமிட்ட உள்நோக்கத்தை பிரதிபலிக்கிறது. ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மையின் கலங்கரை விளக்கமாக இருக்கும் இந்தியாவின் நிலையை குறைகூறும் இத்தகைய முயற்சிகள் வெற்றிபெறாது. உண்மையில் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப். அமைப்புதான் சர்ச்சைக்குரிய அமைப்பாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.