• Thu. Mar 28th, 2024

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் நடக்கும் பகுதிகளில் 19-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.

இந்த தேர்தலில் 2.50 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளார்கள். தமிழகம் முழுவதும் மொத்தம் 74 ஆயிரத்து 416 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. பரீசிலனையின் போது பல்வேறு காரணங்களுக்காக 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14,324 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர்.

218 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி 8ஆவது வார்டில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதுதவிர காஞ்சிபுரம் மாநகராட்சி, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் மரணம் காரணமாக தொடர்புடைய வார்டுகளில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது.

தற்போது 12,500 க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு மொத்தம் 57,600 க்கும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக் கூட்டங்கள், ஊர்வலகங்கள் மற்றும் பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்கு முன்பாக முடித்து விட வேண்டும்.

அதன்படி இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிகிறது. இறுதி கட்ட பிரச்சாரம் என்பதால் அரசியல் கட்சி வேட்பாளர்களும் , தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வெளியாட்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் தங்கி தேர்தல் பணி மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று மாலை 6 மணிக்கு பிறகு தங்களுக்கு தொடர்பில்லாத உள்ளாட்சிகளில் வாக்காளர் அல்லாத வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சியினர், தொண்டர்கள் அனைவரும் அந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

வாக்குப் பதிவுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் , பரிசு பொருட்கள் விநியோகிப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். 45 பறக்கும் படை குழுக்கள் இருந்து வரும் நிலையில் மேலும் 45 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் நடக்கும் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றி 5 கி.மீ. வரையுள்ள பகுதிகளில் இன்று முதல் 19-ம் தேதி வரை மதுக்கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் நடக்கும் பகுதிகளில் 19-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வார்டு வாரியாக பிரதான மற்றும் துணை வாக்காளர் பட்டியல்கள், வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் 268 வாக்கு எண்ணும் மையங்கள் குறித்த விவரங்கள் மாநில தேர்தல் ஆணையத்தின்https://tnsec.tn.nic.in/என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *